உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீதிமன்ற உத்தரவை மீறி கட்டடம் இடிப்பு மீண்டும் கட்டித்தர அதிகாரிகளுக்கு உத்தரவு

நீதிமன்ற உத்தரவை மீறி கட்டடம் இடிப்பு மீண்டும் கட்டித்தர அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை, 'ஜெயா சோப் ஒர்க்ஸ்' நிறுவன நிர்வாக இயக்குனர் சரவணன் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு:திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, ஒரக்காடு கிராமத்தில், நிறுவனத்துக்கு சொந்தமாக நிலம் உள்ளது. கடந்த 2006ல், சென்னை கடன் வசூல் தீர்ப்பாயம் நடத்திய பொது ஏலத்தில் வாங்கினோம். மொத்தம் உள்ள 29 சர்வே எண்களில், ஒரு சர்வே எண் நிலத்துக்கான பட்டா ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, பொன்னேரி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நிலத்தில் உள்ள கட்டடங்களை இடிக்கக் கூடாது என, தடை உத்தரவு பெற்று உள்ளோம்.இதை மீறி, தாசில்தார் மதிவாணன் தலைமையில், இரண்டு அதிகாரிகள், பொக்லைன் இயந்திரத்துடன் வந்து, தொழிலாளர்கள் குடியிருப்பு, குடோன், அலுவலக கட்டடங்கள், மதில் சுவர் ஆகியவற்றை இடித்தனர்.எனவே, நீதிமன்ற உத்தரவை மீறியவர்களை, அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:மனுதாரருக்கு சொந்தமான கட்டடங்கள், சுற்றுச்சுவர், கடந்த ஆக., 13ல் அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்து, ஜூலை 31ல், இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, ஆக., 1ல் அதிகாரிகளுக்கு கிடைத்து உள்ளது.அதனால், இடைக்கால தடை உத்தரவு குறித்து தெரியாது என்று அதிகாரிகள் கூறுவது மிகப்பெரிய பொய். அதிகாரிகளின் இந்த செயல், நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயல். அதிகாரிகள் மீது உயர் நீதிமன்ற அவமதிப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, இடிக்கப்பட்ட கட்டடங்கள், சுற்றுச்சுவரை ஒரு மாதத்துக்குள் அதிகாரிகள் மீண்டும் கட்டி கொடுக்க வேண்டும். வழக்கு விசாரணையை, ஜன., 6க்கு தள்ளிவைக்கப்படுகிறது.அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட்டும், வருவாய் ஆய்வாளர் சந்திரன் முனுசாமி, கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா, உதவி பொறியாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் ஆஜராகாததால், அவர்களுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய, 'பிடி வாரன்ட்' பிறப்பிக்கிறேன்.ஒரக்காடு பஞ்சாயத்து தலைவர் நீலா கணவர் சுரேஷுக்கு எதிராக, ஜாமினில் வெளியில் வர முடியாத, 'பிடி வாரன்ட்' பிறப்பிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

pmsamy
நவ 28, 2024 11:54

நீதிமன்றம் இடிக்க வேணாம்னு சொல்லியும் இடிச்சாங்க. இப்ப கட்டித்தர சொலறாங்க. முடியாதுன்னு சொல்ல போறாங்க.


அமலேஷ்
நவ 28, 2024 07:24

அந்த தத்தி அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுங்க யுவர் ஆனர். பிடி வாரண்ட்டெல்லாம் ஜுஜுபி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை