உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஓ.எம்.ஆர்., எல்காட் சாலை மூடல்: சோழிங்கநல்லுாரில் நெரிசல்

 ஓ.எம்.ஆர்., எல்காட் சாலை மூடல்: சோழிங்கநல்லுாரில் நெரிசல்

சோழிங்கநல்லுார்: ஓ.எம்.ஆர்., எல்காட் வளாக சாலையை மூடியதால், பொதுமக்கள் 5 கி.மீ., சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால், சோழிங்கநல்லுார் சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சோழிங்கநல்லுார் எல்காட் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. இங்கு தினமும், மூன்று ஷிப்ட் பணியில், 25,000க்கும் மேற்பட்ட கார்கள், 30,000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 2,000க்கும் மேற்பட்ட பெரிய வாகனங்கள் செல்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு செல்ல, ஓ.எம்.ஆர்., மற்றும் மேடவாக்கம் சாலை என, இரு நுழைவு வாயில்கள் உள்ளன. அண்ணா சாலை, பூந்தமல்லி, கோயம்பேடு, கிண்டி, வேளச்சேரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து, ஐ.டி., நிறுவனங்களுக்கு செல்லும் வாகனங்கள், ஓ.எம்.ஆர்., நுழைவாயில் வழியாக செல்கின்றன. இதனால், சோழிங்கநல்லுாரில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இந்நிலையில், 10 நாட்களுக்கு முன் ஓ.எம்.ஆரில் உள்ள நுழைவாயிலை மூடியதால், வாகன ஓட்டிகள் சோழிங்கநல்லுார் மற்றும் மேடவாக்கம் சாலையில் 'யு - டர்ன்' செய்து, 5 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. இதனால், சோழிங்கநல்லுார் சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கண்ணகி நகர், செம்மஞ்சேரி ஆகிய காவல் நிலைய போலீசார், எல்காட் வளாக சாலையில் தினமும் ரோந்து பணியில் உள்ளனர். அசம்பாவிதம் நடந்தாலோ, அச்சாலையில் தேவையில்லாத வாகனங்கள் நின்றாலோ, உடனே நடவடிக்கை எடுக்கிறோம். ஐ.டி., நிறுவனங்கள் செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க, போலீசாரை நியமித்து ஒழுங்குபடுத்துகிறோம். மெட்ரோ ரயில் பணி முடியும் வரை, ஓ.எம்.ஆர்., நுழைவாயிலில் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதித்தால், சோழிங்கநல்லுாரில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதற்கு எல்காட் நிறுவனம் மனது வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். எல்காட் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டு நுழைவாயில் இடையே, 600 மீட்டர் நீளம் 100 அடி அகலத்தில் சாலை உள்ளது. மெட்ரோ ரயில் பணி நடப்பதால், வெளி வாகனங்கள் செல்ல அனுமதித்தோம். சிலர் ஆட்டோவில் அமர்ந்து மது அருந்துவது, காதலர்களிடம் வழிப்பறி, ரேஸ் ஓட்டுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. இதுகுறித்து, தாம்பரம் காவல் ஆணையருக்கு தகவல் தெரிவித்து ஓ.எம்.ஆர்., நுழைவு வாயிலை மூடினோம். ஐ.டி., ஊழியர்கள் கோரிக்கை வைத்ததால், திங்கள் முதல் வெள்ளி வரை அவர்களது வாகனங்களை மட்டும் அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். ஆட்டோ உள்ளிட்ட இதர வாகனங்கள் செல்ல அனுமதித்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. காவல் துறை பாதுகாப்புக்கு உறுதி அளித்தால் இதர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ