ஆம்னி பேருந்து தாமதம் பயணியர் போராட்டம்
கோயம்பேடு, இரண்டு தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு முன்பதிவு செய்த நிலையில், ஒரு பேருந்து மட்டும் வந்ததால், அதிருப்தியடைந்த பயணியர், கோயம்பேடில் போராட்டம் நடத்தினர். சென்னையில் இருந்து கன்னியாகுமாரி செல்வதற்காக, 'யுனிவர்செல்' நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேருந்துகளில் 80 பயணியர் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு கோயம்பேடிற்கு வரவேண்டிய இப்பேருந்துகள், குறிப்பிட்ட நேரத்திற்கு நிலையத்திற்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணியர், நிறுவனத்திடம் முறையிட்டபோது, சில மணி நேரத்திற்கு பின், ஒரு பேருந்து மட்டும் வந்துள்ளது. அதில், போதிய இடம் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டதால், ஓட்டுநரிடம் பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்தில் இருந்த ஓட்டுநரும், உதவியாளரும் அங்கிருந்து தப்பியதாக தெரிகிறது. இதையடுத்து ஆம்னி பேருந்து நிறுத்தத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், பயணியருக்கு மாற்றுவழியாக அரசு பேருந்தை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். பயணியரிடம் புகாரை பெற்ற போலீசார், தனியார் பேருந்தை காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர்.