பெருங்குடி மண்டல குழு கூட்டம் 53 தீர்மானங்கள் நிறைவேற்றம்
புழுதிவாக்கம்,பெருங்குடி மணடல மாதாந்திர கூட்டம், குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில், உதவி கமிஷனர் - பொறுப்பு, முரளி முன்னிலையில், நேற்று நடந்தது. அதில், கவுன்சிலர்கள் பேசியதாவது:மணிகண்டன், தி.மு.க., 186வது வார்டு: ராமலிங்கா நகர் பிரதான சாலையில் துவங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைவாக முடித்து, சாலையை சீரமைக்க வேண்டும்.சமீனா செல்வம், தி.மு.க., 188வது வார்டு: அனைத்து வீடுகளுக்கும் முழுமையாக மெட்ரோ இணைப்பு வழங்கும் வரை, இணைப்பு வழங்காத பகுதிவாசிகள் பயன்பெறும் வகையில், தொடர்ந்து தெருக்களில் உள்ள தொட்டிகளில் நீர் நிரப்ப வழிவகை செய்ய வேண்டும்.மழைநீர் வடிகால்வாய், கழிவுநீர் கால்வாய் பணிகளை மேற்கொண்ட பழைய ஒப்பந்ததாரர்கள், அரைகுறையாக விட்ட பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சதீஷ்குமார், அ.தி.மு.க., 182வது வார்டு: கூட்டத்தில், ஒப்புதலுக்காக கொடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதாள சாக்கடை, வடிகால்வாய் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடாததால், அடிக்கடி வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. எனவே அவற்றை சீரமைக்க வேண்டும். மக்கள் குறைகளை தீர்க்க, மின் வாரிய அலுவலகத்தை தொடர்புகொண்டு பேசினாலும், சரியான முறையில் பதிலளிப்பதில்லை.எம்.ஜி.ஆர்., சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலை துறையிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இவ்வாறு அவர்கள் பேசினர்.இதற்கு பதிலிளித்து பேசிய தலைவர் ரவிச்சந்திரன், 'நேரடி கள ஆய்வு செய்து, புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார். பின், ஒருமனதாக, 53 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.