உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கேமராவுடன் கூடிய போலீஸ் தடுப்பு

 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கேமராவுடன் கூடிய போலீஸ் தடுப்பு

சென்னை: நமது நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, சூரிய ஒளியில் செயல்படும் நவீன கேமராவுடன் கூடிய போலீஸ் தடுப்பு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையில், போக்குவரத்து கூடுதல் கமிஷனராக சுதாகர் பணியாற்றியபோது, சூரிய ஒளியால் இயங்ககூடிய, நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட இரும்பிலான தடுப்புகள், 1.10 கோடி ரூபாயில் கொள்முதல் செய்யப்பட்டன. பின், தலா ஒரு தடுப்புகள், 55 போக்குவரத்து காவல் நிலையத்திற்கும் வழங்கப்பட்டன. ஆனால், அவற்றை போக்குவரத்து போலீசார் பயன்படுத்தாமல், அந்தந்த காவல் நிலையத்தில் ஓரம் கட்டி வைத்திருந்தனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், சட்டம் - ஒழுங்கு போலீசாருக்கென வாங்கப்பட்ட நவீன கேமரா பொருத்தப்பட்ட இரும்பிலான தடுப்புகளை, போக்குவரத்து போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதை தான், தற்போது போக்குவரத்து போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ஏற்கனவே வாங்கப்பட்ட சூரிய ஒளியில் செயல்படும் நவீன தடுப்புகள் பயன்பாடு இன்றி வீணாகி வந்தன. இதுகுறித்து, நமது நாளிதழில் புகைப்படத்துடன் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, உயர் அதிகாரிகள் உத்தரவின்படி, சூரிய ஒளியில் செயல்படும் நவீன கேமரா பொருத்தப்பட்ட தடுப்புகள், நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து போக்குவரத்து சப் - இன்ஸ்பெக்டரிடம் கேட்டபோது, 'சூரிய ஒளியில் செயல்படும் நவீன கேமரா பொருத்தப்பட்ட இரும்பு தடுப்புகளை, ஸ்பென்சர் பிளாசா சிக்னலில் வைத்து உள்ளோம். காலை முதல் மாலை வரை, சாலை விதிமீறல் தொடர்பாக, கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்படும். இரவு நேரங்களில், சட்டம் - ஒழுங்கு போலீசாருக்கு வழங்கப்பட்ட நவீன தடுப்புகளை பயன்படுத்துவோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி