குன்றத்துார் சாலையில் விரிவாக்கம் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு
குன்றத்துார், பல்லாவரம், போரூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய நான்கு பகுதிகளுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலைகள் இணையும் பகுதியாக குன்றத்துார் உள்ளது.குன்றத்துார் அருகே இந்த நெடுஞ்சாலைகள் குறுகலாக உள்ளதால், தினமும் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலைகளை விரிவாக்கம் செய்ய, அமைச்சர்கள் வேலு, அன்பரசன் தலைமையில், கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதையடுத்து, குன்றத்துார் - பல்லாவரம் நெடுஞ்சாலையில், குன்றத்துார் அருகே கரைமா நகரில் சாலையின் இருபுறமும் உள்ள, 200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகளை இடித்து அகற்றும் பணி, மூன்றாவது நாளாக நேற்று நடந்தது.பொக்லைன் இயந்திரத்தை கொண்டு குடியிருப்பு வீடுகளும் இடிக்கப்பட்டதால், அப்பகுதிவாசிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், தங்களுக்கு மாற்று இடம் வழங்கிய பின் வீடுகளை இடிக்க வேண்டும் எனக் கூறி, அப்பகுதிவாசிகள் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.இதையடுத்து, அங்கு தயாராக இருந்த வருவாய் துறை, போலீசார் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர்.அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க, ஆக்கிரமிப்புகள் அகற்றும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.