உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில்பதாகையில் வி.ஏ.ஓ., உதவியாளர் இல்லாமல் பொதுமக்கள் அவதி

கோவில்பதாகையில் வி.ஏ.ஓ., உதவியாளர் இல்லாமல் பொதுமக்கள் அவதி

ஆவடி:ஆவடி அடுத்த கோவில்பதாகையில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் இல்லாததால் பொதுமக்கள் வருவாய் துறை தொடர்பான சான்றிதழ்கள் பெறுவதற்கு அவதிப்பட்டு வருகின்றனர். ஆவடி அடுத்த கோவில்பதாகை, கம்மாளர் தெருவில் கோவில்பதாகை கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோவில்பதாகை, பூம்பொழில் நகர், அசோக் நகர், எச்.வி.எப்., குடியிருப்பு, கலைஞர் நகர், கன்னடபாளையம், ராஜீவ் காந்தி நகர், பிருந்தாவன் நகர், கிறிஸ்து காலனி, எம்.சி.பி நகர் உள்ளிட்ட பத்து கிராமங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள், பட்டா, சிட்டா, அடங்கல், வருமானம், சாதி சான்றிதழ், ஓ.பி.சி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் வருவாய் தொடர்பான அனைத்து விதமான சான்றிதழ்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். தினமும் 50 பேர் வந்து செல்லும் இந்த அலுவலகத்தில், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. இந்நிலையில் சேக்காடு கிராம நிர்வாக அலுவலர், கோவில்பதாகை அலுவலகத்தை கூடுதலாக கவனித்து வருகிறார். தண்டுரை கிராம உதவியாளர் கோவில்பதாகை அலுவலகத்தை கூடுதலாக கவனித்து வருகிறார். பத்து மாதங்களாக கிராம உதவியாளர், இரண்டு மாதங்களாக கிராம நிர்வாக அலுவலர் இல்லாமல் கோவில் பதாகை கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். ஆவடி தாலுகாவில் 24 கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இதில், 15 கிராம உதவியாளர்கள் மட்டுமே உள்ளனர். கோவில்பதாகை உட்பட ஒன்பது இடங்கள் காலியாக இருப்பதால், பொது மக்கள் அவதிப்படுகின்றனர். காலியாக உள்ள இடங்களை மாவட்ட நிர்வாகம் நிரப்பி, பொதுமக்கள் சிரமத்தை போக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !