எழுத்தாளர்களை வாழ வைப்பது வாசகர்கள்: ரவி தமிழ்வாணன்
சென்னை, ''வாசகர்கள் தான், எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் வாழ வைப்பவர்கள்,'' என, மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் பேசினார்.சோழிங்கநல்லுாரில் உள்ள புஷ்கர் அடுக்குமாடி குடியிருப்பில், மூத்த குடிமக்கள் வசிக்கும் சிறப்பு பகுதியாக, 'ஷெரின் கம்யூனிட்டி' அமைந்துள்ளது. அங்கு வசிக்கும் மூத்த குடிமக்களின் சார்பில், 'உதயா' எனும் மாத பத்திரிகை வெளியிடப்பட்டு வருகிறது.ஷெரின் கம்யூனிட்டிகளை பராமரித்து வரும், 'கொலம்பியா பசுபிக்' எனும் நிறுவனம் சார்பில் இதுவரை வெளியான உதயா பத்திரிகையின் 49 பதிப்புகள், ஐந்து புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. அதன் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையின் 50வது பதிப்பு கொண்டாட்டம், நேற்று நடந்தது.இதில், உதயா மாதப் பத்திரிகையின் ஐந்து தொகுப்புகளை, ஆசிரியர் வசந்தா கிருஷ்ணசுவாமி வெளியிட்டார். சிறப்பு விருந்தினரான மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.பின் அவர் பேசியதாவது:உதயா பத்திரிகையின் உதவியால், ஏராளமான எழுத்தாளர்கள் உருவாகிஉள்ளனர். தன் 82வது வயதில், இந்த பத்திரிகையை வசந்தா சிறப்பாக நடத்தி வருகிறார். அனைத்து தரப்பு மக்களையும் ஈர்ப்பதாக உதயா பத்திரிகை உள்ளது. புத்தக வாசிப்பிற்கு ஒவ்வொருவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாசகர்கள் தான் எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் வாழ வைப்பவர்கள்.இவ்வாறு ரவி தமிழ்வாணன் பேசினார்.இந்நிகழ்ச்சியில் கொலம்பியா பசுபிக் நிறுவன பொது மேலாளர் பாலாஜி, அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதயா பத்திரிகைக்காக பங்காற்றியவர்கள், நிகழ்வில் கவுரவிக்கப்பட்டனர்.