நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்
பெருங்குடி :கல்லுக்குட்டை நீர்நிலை பகுதியில், ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தகர குடியிருப்பை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். பெருங்குடி, 184வது வார்டில் உள்ள கல்லுக்குட்டை, திருவள்ளுவர் நகர், முல்லை தெருவில் ஆக்கிரமித்து கட்ட முயன்ற கட்டுமானத்தை, கடந்த வாரம், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இந்நிலையில், மீண்டும் அதே பகுதி, கணபதி தெருவில் உள்ள நீர்நிலை இடத்தில், சிலர் நில ஆக்கிரமிப்பு செய்து, 13 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, நான்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அருகில் வசிப்போர் அளித்த தகவலின்படி, சென்னை மாநகராட்சி அதிகாரிகள், நேற்று காலை நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தகர குடியிருப்பை அகற்றினர்.