உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உணவு டெலிவரி ஊழியர்களுக்காக ஏசி வசதியுடன் அமையுது ஓய்வறை

உணவு டெலிவரி ஊழியர்களுக்காக ஏசி வசதியுடன் அமையுது ஓய்வறை

சென்னை, உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் வசதிக்காக, சென்னை மாநகராட்சி சார்பில், 'ஏசி' வசதியுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்பட உள்ளது.சென்னை போன்ற பெரு நகரங்களில், ஸ்விக்கி, சுமோட்டோ போன்ற நிறுவனங்கள், 24 மணி நேரமும், உணவு டெலிவரி செய்யும் பணியை வழங்கி வருகின்றன.இந்த நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில், 10 சதவீதத்திற்கு மேல் பெண்கள்.இவர்கள், மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களில்கூட டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.உணவு டெலிவரி இல்லாத நேரங்களில், சாலையோரங்கள், மரத்தடியில் ஓய்வெடுக்கும் சூழல் உள்ளது.சில ஹோட்டல்களில், உணவு டெலிவரி பணியாளர்கள், கழிப்பறை செல்வதற்கு கூட அனுமதி அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.இந்நிலையில், உணவு டெலிவரியில் ஈடுபடுவோர் நலன் கருதி, சென்னையின் முக்கிய சாலைகளில், 'ஏசி'யுடன் கூடிய ஓய்வறையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் போன்ற அதிக பணியாளர்கள் இருக்கும் இடங்களில், 600 சதுர அடி பரப்பளவில், இந்த ஓய்வறை அமைகிறது.ஓய்வூறையில், கழிப்பறை, குடிநீர், மொபைல் போன் சார்ஜ், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இடம் பெறும்.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:உணவு டெலிவரி நிறுவனங்களுடன் இணைந்து, 'ஏசி' வசதியுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஓய்வறையை, டெலிவரி ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில், பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும்.மேலும், காவலர்களும் நியமிக்கப்பட்டு, அறைகளின் துாய்மை மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். இந்த வசதி, அரசின் அனுமதி பெற்று, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 03, 2025 03:31

எல்லாம் ஒரு வாரத்திற்கு மட்டும் தான்.....தரமில்லாத குளிர் சாதனம் மற்றும் பராமரிப்பு இரண்டும் ஒரு வாரத்திற்கு மேல் செயல்படாது.... வரிப்பணம் வீணாகும்....!!!


ஆரூர் ரங்
ஏப் 02, 2025 11:48

சாதாரண பொதுமக்களுக்கும் மாநகரத்தில் கழிப்பறை வசதி மிகக்குறைவு. இதனை ஒருசாரார் மட்டுமே பயன்படுத்தலாம் என்பது சரியல்ல.


அப்பாவி
ஏப் 02, 2025 07:47

அரசு எதுக்கு வசதி செய்து குடுக்கணும்? ஒவ்வொரு ஆர்டரிலும் 30 பர்சண்ட் அடிக்குற இந்த நிறுவனங்கள் தானே ஊழியர்கள் நலனை கவனிக்கணும்? இது ஏதோ புதுவித ஆட்டை திட்டமாகத்தான் தெரியுது.