புளியந்தோப்பில் நெரிசலை குறைக்க ஆம்னி பஸ்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு
புளியந்தோப்பு:புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆம்னி பேருந்துகளுக்கு, போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.புளியந்தோப்பு, ஸ்டீபன்சன் சாலையில் பின்னி மில் அருகே குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் அதிகம் உள்ளன.இப்பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருவதோடு, டிமலஸ் சாலையில் மழைநீர் வடிகால்வாய் பணிகளும் நடக்கின்றன. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக உள்ளது.இது மட்டுமின்றி, கனரக வாகனங்களும், ஆம்னி பேருந்துகளும் புளியந்தோப்பு நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருவதால், 24 மணி நேரமும் நெரிசல் தொடர்வதாக புகார் எழுந்தது.மேலும், பின்னி மில் வளாகத்தை ஆம்னி பேருந்துகள் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தி, பயணியர் மற்றும் சரக்குகளை ஏற்றி இறக்குவதாகவும் புகார் உள்ளது.இந்நிலையில், இப்பகுதியில் நெரிசலை குறைக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் சில நடைமுறைகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர்.அதாவது, பின்னி மில் பகுதியில் இருந்து பயணியர் மற்றும் சரக்குகளை, ஆம்னி பேருந்துகளில் ஏற்றக்கூடாது. ஐந்து நிமிட இடைவேளையில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும், ஆம்னி பேருந்துகள் காலை 7:00 மணிக்குள் பின்னி மில் வளாகத்திற்குள் வந்துவிட வேண்டும். தவறும்பட்சத்தில், காலை 11:00 மணிக்கு பிறகே உள்ளே வர அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.போக்குவரத்து போலீசார் கூறியதாவது:பள்ளி மாணவி இறப்பு சம்பவத்திற்கு பின், காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள், கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை; இரவு 9:00 மணி முதல் மறுநாள் காலை 7:00 மணி வரை மட்டுமே, கனரக வாகனங்கள் மற்றும் ஆம்னி பேருந்துகளை புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் இயக்க வேண்டும்.இவற்றை மீறி வந்து நெரிசலோ அல்லது விபத்தோ ஏற்படுத்தினால், அதற்கு சம்பந்தப்பட்ட கனரக வாகனங்கள் அல்லது ஆம்னி பேருந்துகளே பொறுப்பாகும்.மேலும், மாற்று வழியாக இரவு 8:00 மணி முதல் மறுநாள் காலை 7:00 மணி வரை, பெரம்பூர் மேட்டுப்பாளையம் சந்திப்பு - ஜமாலியா முரசொலி பூங்கா, பெரம்பூர் ரயில்வே சாலை, 'ஏஏ' சாலை, மேல்பட்டி பொன்னப்பன் சாலை, அம்பேத்கர் கல்லுாரி சாலை, வியாசர்பாடி முல்லை நகர் சாலையை பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.