உலா வரும் கால்நடைகளால் சாலையில் விபத்து அபாயம்
மணலி,:மணலி மண்டலம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டாலும், 16 மற்றும் 17 ஆகிய வார்டுகளில், விவசாயம், அதை சார்ந்த கால்நடை வளர்ப்பும் நடந்து வருகிறது.இந்நிலையில், மானாவாரியாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, மணலி, நெடுஞ்செழியன் தெரு, காமராஜர் சாலை போன்ற இடங்களில் தறிக்கெட்டு ஓடும் கால்நடைகள், திடீரென வாகனங்கள் மீது மோதுகின்றன.எருமை, பசு, காளை மாடுகள் மட்டுமின்றி, குதிரைகளும் தற்போது போக்குவரத்திற்கு இடையூறாக, சுற்றித்திரிவாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.தெருவிளக்குகளும் சரியாக ஒளிராததால், கால்நடைகள் வருவதை பார்க்காமல், மோதி விபத்துக்குள்ளாகும் வாகனங்களாலும், பிரச்னை ஏற்படுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, கால்நடைகளின் உரிமையாளர்களை அழைத்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், கால்நடை வளர்ப்பில் ஈடுபட அறிவுறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.