சாலை விபத்து உயிரிழப்புகள் இந்தாண்டு 14 சதவீதம் குறைவு
சென்னை:கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், சென்னையில் நான்கு மாதங்களில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள், 14 சதவீதம் குறைந்துள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விபத்துகளை தடுப்பது மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அத்துடன், ஏ.என்.பி.ஆர்., எனப்படும் தானியங்கி அதிநவீன தொழில் நுட்ப கண்காணிப்பு கேமரா மற்றும் ரோந்து வாகனங்களில் உள்ள கேமராக்கள் வாயிலாக, போக்குவரத்து விதிமீறல்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.அதன் வாயிலாக, அதிவேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ெஹல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. சாலைகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள், ஒளிரும் விளக்குகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.போலீசாரின் தொடர் நடவடிக்கை காரணமாக, கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு, ஏப்.,25 நிலவரப்படி, சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள், 14 சதவீதம் குறைந்துள்ளது.கடந்தாண்டு, ஜனவரி முதல் ஏப்., 24 வரை, சாலை விபத்துகளால் 173 பேர் உயிரிழந்துள்ளனர். அதே காலகட்டத்தில் இந்த ஆண்டில், 149 பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்துகளை குறைப்பதற்கும், சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.