மருந்துகள் தர ஆய்வகம் மேம்பாட்டிற்கு ரூ.12 கோடி
சென்னை, கிண்டி கிங் ஆய்வகத்தில், மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தில், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ், கிண்டியில் கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கு, நவீன கருவிகளுடன் மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கி, மக்கள் நல்வாழ்வுதுறை செயலர் சுப்ரியா சாஹு அரசாணை வெளியிட்டுள்ளார்.இந்த மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வகத்தின் வாயிலாக, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரிகளில், பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணியர், முதியோர் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பான மருந்துகளை வழங்க முடியும்.மேலும், மருந்துகள், மருத்துவ சாதனங்கள் தொடர்புடைய தீவிர எதிர்மறை விளைவுகள், ரத்த பரிமாற்று எதிர்வினைகள், தடுப்பூசிகளுக்கு பின் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் கண்காணிப்பதற்கும், தடுப்பதற்கும் உதவியாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.