மெரினாவில் சமையல்காரரிடம் ரூ.3,000 திருட்டு
சென்னை:திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் கணேசன், 60. இவர், சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் தங்கி, சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மெரினா கடற்கரைக்கு சென்ற அவர், வெயிலின் தாக்கத்தால், சட்டையை கழற்றி வைத்துவிட்டு படுத்திருந்தார். அப்போது, அந்த இடத்தில் இருந்த இரண்டு பேர், நலம் விசாரிப்பது போல கணேசனிடம் பேச்சு கொடுத்து, அவரின் சட்டையில் இருந்த, 3,000 ரூபாயை திருடிவிட்டு தப்பினர்.இதுகுறித்து, மெரினா கடற்கரை காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சரண்ராஜ், 28; ஆனந்தராஜ், 25 ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 3,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். சரண்ராஜ், ஏற்கனவே நான்கு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.