உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜெர்மன் வங்கி நிதியில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.218 கோடி மாங்காடு நகராட்சியுடன் 6 ஊராட்சி இணைப்பு

ஜெர்மன் வங்கி நிதியில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.218 கோடி மாங்காடு நகராட்சியுடன் 6 ஊராட்சி இணைப்பு

குன்றத்துார், மாங்காடு நகராட்சியில் ஏற்படும் கழிவுநீர் பிரச்னையை தீர்க்க, 218 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. அதனுடன் சுற்றியுள்ள ஆறு ஊராட்சிகளுக்கும் இத்திட்டம் அமைக்கப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சியின் 27 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியாக இருப்பதால், புதிய குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில், இங்கு பாதாள சாக்கடை திட்டம் இல்லை. இதனால், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நேரடியாக நீர்நிலைகள், காலி மனைகளில் தேங்கி நிற்பதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.இதனால், பாதாள சாக்கடை திட்டம் அமைக்க கோரி, நகரவாசிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், மாங்காடு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளது. இந்நகராட்சியுடன், அருகில் உள்ள பூந்தமல்லி நகராட்சி, திருவேற்காடு நகராட்சிகளிலும் இத்திட்டம் மேற்கொள்ள, மொத்தம் 999.69 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.இதில், மாங்காடு நகராட்சிக்கு மட்டும் 218 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.இத்திட்டம் சம்பந்தமாக, பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.அதன்படி, மாங்காடு நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்துடன், குன்றத்துார் ஒன்றியத்தில் உள்ள பரணிபுதுார், சிக்கராயபுரம், கொழுமணிவாக்கம், அய்யப்பன்தாங்கல், மவுலிவாக்கம், மலையம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை இணைத்து, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடிவாகி உள்ளது.பாதாள சாக்கடை திட்டம் அமைந்தால், மாங்காடு நகராட்சி மட்டுமின்றி, அதன் அருகில் உள்ள ஊராட்சிகளிலும் கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திட்ட பணிகளை தாமதப்படுத்தாமல் விரைந்து துவங்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்கின்றனர்.இதுகுறித்து மாங்காடு நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாங்காடு நகராட்சி, அதன் அருகில் உள்ள ஆறு ஊராட்சிகளை இணைத்து 218 கோடி ரூபாய் மதிப்பில், பாதாளா சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கைக்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.ஜெர்மன் வங்கி வளர்ச்சி நிதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நிதி கிடைத்தவுடன், பணிகள் விரைவில் துவங்கும். மூன்று ஆண்டுக்குள் பணி முடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பாதாள சாக்கடை

திட்ட பணி விபரம்27வார்டுகள்-8.40 சதுர கி.மீ.,நகராட்சி பரப்பு-1,10,000மக்கள் தொகை-84 கி.மீ., நீளம்குழாய் புதைப்பு-22,000வீடுகளுக்குஇணைப்பு-3நீரேற்று நிலையம்-இணைக்கப்பட ஊராட்சிகள்: மவுலிவாக்கம், அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார், சிக்கராயபுரம், கொழுமணிவாக்கம், மலையம்பாக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ