செம்மண்ணுடன் குடிநீர் மாதவரத்தில் அதிர்ச்சி
மாதவரம், பொது குழாயில் செம்மண்ணுடன் கலந்த குடிநீர் வந்ததால், மாதவரம் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாதவரம் மண்டலம், 24வது வார்டு திருவள்ளுவர் தெருவில் உள்ள பொது குழாயில், நேற்று காலை 7:00 மணிக்கு வழங்கப்பட்ட குடிநீர், செம்மண் கலந்து, கழிவுநீராக வந்தது. இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு முறையிட்ட பின், ஒரு மணி நேரத்தில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. பகுதிமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில், சில வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. 10,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பொது குழாயை தான் நம்பி வாழ்கிறோம். எங்களையும் குடிநீர் இணைப்பு எடுக்க சொல்லி, அதிகாரிகள் வலியுறுத்து வருகின்றனர். அதனால், நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான், பொது குழாயில் குடிநீர் விநியோகிக்கின்றனர். இந்நிலையில், எதற்கும் பயன்படுத்த முடியாத வகையில், செம்மண் கலந்த குடிநீர் விநியோகித்துள்ளனர். அமைச்சர்கள், அதிகாரிகளின் வீடுகளுக்கு இதுபோல் குடிநீர் விநியோகம் செய்வரா? இவ்வாறு அவர்கள் கூறினர். குடிநீர் வாரியத்தினர் கூறுகையில், 'சமீபத்தில், புழல் ஜி.என்.டி., சாலை அருகே, கழிவுநீர் குழாய் பதிப்பு வேலை நடந்துள்ளது. அப்பணியின்போது, அக்குழாயில் சேதம் அடைந்து குடிநீருடன் கழிவுநீர் கலந்திருக்கலாம். விரைவில் சரி செய்யப்படும்' என்றனர். ஒரு வாரமாக மக்கள் அவதி குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சியில் ஆதனஞ்சேரி கிராமம் உள்ளது. இந்த பகுதி மக்களுக்கு தெருக்குழாய் மூலம் காலை 6:30 மணி முதல் காலை 9:00 மணி வரை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், காலை 6:30 மணி முதல் காலை 7:30 மணி வரை மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், போதிய குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.