சித்தி விநாயகர் கோவில் சரிந்து தொட்டிக்குள் விழுந்ததால் பரபரப்பு
புதுவண்ணாரப்பேட்டை மழைநீரை தேக்கி வைக்கப்பதற்காக கட்டப்பட்டு வந்த தொட்டிக்குள், விநாயகர் கோவில் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் சாலை, இந்திரா நகரில், 30 ஆண்டுகள் பழமையான சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இதன் அருகில், மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக, 50,000 லிட்டர் கொள்ளளவு உடைய தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது. அதாவது, சாலை, குடியிருப்புகளை சூழும் தண்ணீரை, மோட்டார் வைத்து பம்ப் செய்து கால்வாய் வழியாக, இந்த தொட்டிக்குள் கடத்தப்படுவதற்காக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தொட்டியின் கட்டமைப்பை சரியாக அமைக்காததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சித்தி விநாயகர் கோவில் திடீரென சரிந்து, கோபுரத்துடன் கால்வாய் தொட்டிக்குள் நேற்று விழுந்தது. அதிர்ச்சியடைந்த பகுதிமக்கள், புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதியில் யாரும் செல்லாமல் இருக்க இரும்பு தடுப்பு கம்பிகள் வைத்துள்ளனர். கோவில் சரிந்து விழுந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது.