உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உள்ளத்தை உருக்கிய சவுமியா குரல்

உள்ளத்தை உருக்கிய சவுமியா குரல்

- நமது நிருபர் -குளத்து நீரில் இலை விழுந்ததும் ஏற்படுவதை போல், மகிழ்ச்சியான சிறு அதிர்வுடன் மியூசிக் அகாடமியில் ஆரம்பித்தது, சங்கீத கலாநிதி சவுமியாவின் இசைக்கச்சேரி.மழவை சிதம்பரபாரதியின், 'மா மயூர மீதிலேறி வா என்னை ரட்சிக்க' கீர்த்தனையை, வலி நிவாரணியான 'பிலஹரி' ராகம், ஆதி தாளத்தில் அமைத்து பாடினார். கவலையில் தவிக்கும் நெஞ்சுக்கு மருந்தாக, உள்ளத்தை உருக்கும் வகையில் இருந்தது சவுமியாவின் குரல்வளம்.அடுத்து, முத்துசாமி தீட்சிதரின், 'நாக காந்தாரி ராகனுதே' கீர்த்தனையை, நாக காந்தாரி ராகம், ஆதி தாளத்தில் அமைத்து பாடும்போது, செவிகள் ரெண்டும் சவுமியாவின் ஸ்வரத்திலேயே லயித்தன.தொடர்ந்து, 'நா மோராலகிம்ப வேமி' எனும் தியாகராஜர் கீர்த்தனையை, தேவ காந்தாரி ராகம், ரூபக தாளத்தில் பாடியபோது இசைத்த ராமகிருஷ்ணனின் வயலின் இசைக்கு தனி கவனம் கிடைத்தது.பின், சவுமியாவின் ஆலாபனையில் அவரின் அனுபவம் தெரிந்தது. விரிவான தெளிவான ஸ்வரங்கள் செய்து சாகசம் நிகழ்த்தினார். அடுத்து, தன்யாசி ராகம், ரூபக தாளத்தில் அமைந்த ஆனை அய்யரின் 'பருவம் பார்க்க நியாயமா' கீர்த்தனையை பாடினார். பல்லவி முடித்து நேரடியாக, மூன்றாம் சரணமான, 'மன மலரினில் அன்னமெனவளர் மரகத வடிவமிகு மயிலே' என்ற வரிக்கு மட்டும், விதவிதமாக வடிவம் கொடுத்து பாடியது ஆச்சரியப்பட வைத்தது.அடுத்து, கர்நாடக சங்கீத உலகில், தனித்துவமான பாலஹம்சா ராகத்தில், 'நலனின் துாதாக சென்ற எழில் மிகு மஹாபல ஹம்சமே' என்ற இரு வரிகளை மட்டும் வைத்து பாடினார். தொடர்ந்து, ராக தான பல்லவியில், பல்வேறு பரிமாணங்களை தொட்டுக்காட்டி, நம் இசை அறிவுக்கு ஆகாரம் இட்டனர். தனி ஆவர்த்தனத்தில், நெய்வேலி நாராயணனின் மிருதங்கம், சந்திரசேகர சர்மாவின் கடம் பங்கு அலாதி.இறுதியாக, அண்ணாமலை ரெட்டியாரின் 'புள்ளிக் கலாப மயில்' கீர்த்தனையை, காவடிச் சிந்து ராகம், ஆதி தாளத்தில் அமைத்து பாடி, அரங்குக்கே முருகன் அருளை அள்ளி வழங்கினார்.ரசிகர்களை இசை மயக்கத்திலேயே வைத்திருக்கும் கலை நுணுக்கம் தெரிந்தவர் சவுமியா என்பதில் சந்தேகமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை