மண்டல பால் பேட்மின்டன் போட்டி செ.ஜோசப் கல்லுாரி முதலிடம்
சென்னை: திண்டுக்கல்லில் நடந்த அண்ணா பல்கலையின் மண்டலங்களுக்கு இடையிலான பால் பேட்மின்டன் போட்டியில், சென்னை செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி சாம்பியன் கோப்பையை வென்றது. அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளை பல்வேறு மண்டலங் களாக பிரித்து, விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. மண்டலங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதன்படி, ஆடவர் பால் பேட்மின்டன் போட்டி, திண்டுக்கல்லில் நிறைவடைந்தது. போட்டியில், 14 அணிகள் மோதின. அனைத்து போட்டிகள் முடிவில், அரையிறுதியில் செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி அணி, சென்னை பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான போட்டி யின் முடிவில், 35 - 31, 26 - 35, 35 - 14 என்ற செட் கணக்கில், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி, சேலம் வி.எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரியை, 35 - 28, 35 - 31 என்ற செட் கணக்கில் தோற்கடித்து முதல் இடத்தை கைப் பற்றியது.