உங்களுடன் ஸ்டாலின் முகாம் குன்றத்துார், கோவூரில் துவக்கம்
குன்றத்துார், குன்றத்துார் நகராட்சி, கோவூர் ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது.'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை, கடலுார் மாவட்டத்தில், நேற்று முதல்வர் துவக்கி வைத்தார்.இத்திட்டத்தில், நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில், 13 துறைகள், 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில், 15 துறைகள், 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன.குன்றத்துார் நகராட்சி மற்றும் கோவூர் ஊராட்சியில், இந்த முகாம் நேற்று நடந்தது. அதில், மகளிர் உரிமை தொகை, பட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெற பொதுமக்கள் விண்ணப்பித்தனர்.இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., பாலு ஆகியோர் பங்கேற்று முகாமை பார்வையிட்டனர்.இதையடுத்து, 18 பயனாளிகளுக்கு, 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறு வணிக கடன், தொழில் முனைவோர் கடன், இரண்டு மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், குன்றத்துார் நகராட்சி தலைவர் சத்தியமூர்த்தி, கோவூர் ஊராட்சி தலைவர் சுதாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தாம்பரத்தில் நடந்த துவக்க நிகழ்ச்சியில், செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, எம்.எல்.ஏ.,க்கள் ராஜா, கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஆலந்துார் மண்டலத்திற்கான, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், இன்று நங்கநல்லுாரில் துவக்கி வைக்கப்படுகிறது.