உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெருநாய் அட்டகாசம் அம்பத்துாரில் சிறுவன், சிறுமியை கடித்து குதறியது

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெருநாய் அட்டகாசம் அம்பத்துாரில் சிறுவன், சிறுமியை கடித்து குதறியது

அம்பத்துார்: அம்பத்துாரில் சிறுவன் - சிறுமியை தெருநாய் கடித்து குதறியது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெருநாய்களின் அட்டகாசத்தால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதேநேரம், பூதாகரமாகும் நாய்கடி விவகாரத்தில், தீர்க்கமான நடவடிக்கை எடுக்காமல், மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். அம்பத்துார், ஒரகடம், கோவிந்தராஜ் தெருவைச் சேர்ந்தவர் சரவண பிரசாத், 34. இவரது மனைவி தமிழ்செல்வி, 31. இவர்களது மகள் தன்மதி, 7, இரண்டாம் வகுப்பு படிக்கிறார். கடந்த 23ம் தேதி மாலை, வீட்டின் வாசலில் நின்றிருந்த சிறுமி தன்மதியை, அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று துரத்தியது. அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுமியின், வலது கால் மற்றும் கையை, தெரு நாய் கடித்து குதறியது. சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அங்கிருந்த பெண் ஒருவர், நாயை தைரியமாக விரட்டியடித்து, சிறுமியை மீட்டார். அந்த நாய் அங்கிருந்து தப்பி செல்லும் வழியில், அதே பகுதியைச் சேர்ந்த கவிஷ், 8, என்கிற மற்றொரு சிறுவனையும் கடித்துள்ளது. சிறுமி தன்மதியை அவரது பெற்றோர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது, சிறுமி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தின் போது, சிறுமியின் கை மற்றும் காலில், தெரு நாயின் 10 பற்கள் ஆழமாக பதிந்துள்ளதாக தெரிகிறது. சிறுவன் கவிஷ், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். சமீப காலமாக, சென்னையில் தெருநாய் தாக்குதல்கள் அதிகரித்து, சிறுவர் - சிறுமியர், முதியோர், கர்ப்பிணியர் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் சைதாப்பேட்டையில் நான்கு தெருநாய்கள் சேர்ந்து துரத்தி கடித்ததில், கீழே விழுந்த மூதாட்டி, இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. பூதாகரமாகும் நாய்கடி விவகாரத்தில், தீர்க்கமான நடவடிக்கை எடுக்காமல், மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர் என பகுதிமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். விளையாட விடவே பயமா இர ுக்க ு அம்பத்துார் பகுதிமக்கள் கூறியதாவது: அம்பத்துார் மண்டலத்தில் தான் அதிகளவில் நாய்கள் உள்ளதாக, கடந்தாண்டு எடுத்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நாய்கடி சம்பவம் நடந்த பிறகு நாய்களை பிடிப்பதற்கு பதிலாக, அனைத்து தெரு நாய்களை பிடித்து, கருத்தடை செய்ய, போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி முன்வர வேண்டும். இதனால், குழந்தைகளை வெளியே விளையாட விடவே பயமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Venkatesan Srinivasan
அக் 27, 2025 16:58

அந்த நாய் அங்கிருந்து தப்பி செல்லும் வழியில், அதே பகுதியைச் சேர்ந்த கவிஷ், 8, என்கிற மற்றொரு சிறுவனையும் கடித்துள்ளது - இது போதும் பீட்டா, புளூ க்ராஸ் அமைப்புக்களுக்கு நாய்களுக்காக வக்காலத்து வாங்க. நாய் ஏன் சுதந்திரமாக உலவ முடியவில்லை? ஏன் தப்பித்து ஓட வேண்டிய நிலை? என்று நாய் ஆர்வலர்கள் வந்து விடுவார்கள். இந்த விஷயங்களை அரசு தீவிரமாக சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் விசாரித்து நாய் ஆர்வலர்கள் ஏன் பொதுமக்கள், குழந்தைகள், முதியோர் நடமாடும் தெருவில் நாய்களை அலைய விட்டு ஆபத்து ஏற்பட காரணமாக இருக்கின்றனர் என்று. அவர்களுக்கு மிருக ஜீவ காருண்யம் என்ற போர்வையில் வேறு ஏதேனும் குற்ற தொடர்பு உள்ளதா என விசாரணை செய்ய வேண்டும். வெறிநாய்கடி நோய் தடுப்பு மருந்து கம்பெனிகள் ஆதரவு இந்த தெருநாய்கள் விஷயத்தில் இருப்பதாக பரவலான சந்தேகம் மக்களிடையே உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை