உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீதிமன்றங்களில் பாதுகாப்பை பலப்படுத்துங்க! ஐகோர்ட் உத்தரவு

நீதிமன்றங்களில் பாதுகாப்பை பலப்படுத்துங்க! ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கைதானவர்களில் சிலர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து, அவர்களின் உறவினர்கள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்தனர்.இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆகியோர் ஆஜராகி, நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பான விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்தனர்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள், நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது, விசாரணையில் தெளிவாக தெரியவந்துள்ளது. இது அதிர்ச்சியளிக்கிறது. உயர் நீதிமன்றத்தை போலவே, உயர் நீதிமன்ற வளாகத்தினுள் உள்ள செஷன்ஸ் நீதிமன்றங்கள், குடும்ப நல நீதிமன்றங்கள் மற்றும் பிற நீதிமன்றங்களுக்கும் பாதுகாப்பை விரிவுபடுத்தப்பட வேண்டும். 'மப்டி'யில் போலீசாரை நியமிக்க வேண்டும்.விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்க, இதுமிகவும் முக்கியமானது. எனவே, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி,காவல் துறை ஒருங்கிணைந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில், வழக்கறிஞர் சங்கங்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பரிசோதனைக்கு காலஅவகாசம் எடுக்கும் என்பதால், சிரமங்களைத் தவிர்க்க முன்கூட்டியே, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வர வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி