சாட்டிலைட் போனுடன் வந்த மாணவரின் பயணம் ரத்து
சென்னை,சென்னை விமான நிலையத்திற்கு, சாட்டிலைட் போனுடன் வந்த அமெரிக்க மாணவரின் பயணம் ரத்தானது. சிங்கப்பூர் செல்லும் 'ஸ்கூட் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் இரவு 12:30 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்பட தயாரானது. இதில் பயணிக்க, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒக்லே ஜாக்சன், 22, என்ற மாணவர் காத்திருந்தார். இவர், சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்ல இருந்தார். இவரது உடைமைகளை 'ஸ்கேன்' இயந்திரம் வாயிலாக, பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட, சாட்டிலைட் போன், அவரிடம் இருந்தது தெரிந்தது. இந்தியாவில் இந்த வகை போன் பயன்படுத்தக்கூடாது என்பது தனக்கு தெரியாது என மாணவர் கூறியும், விளக்கத்தை ஏற்காத அதிகாரிகள், அவரது பயணத்தை ரத்து செய்து, விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.