கோடை வெயில் தாக்கம் காய்கறி வரத்து குறைவு
கோயம்பேடு: கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் காய்கறி விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து உள்ளது. இங்கிருந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் வாங்கி செல்கின்றனர். வழக்கமாக சந்தைக்கு 8,000 - 10,000 டன் காய்கறிகள் விற்பனைக்கு வரும். இந்த நிலையில், கடும் கோடை வெயில் காரணமாக காய்கறிகளின் வரத்து 50 சதவீதம் குறைந்து, விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தேர்தலை முன்னிட்டு, நேற்று முன்தினம் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று வழக்கம் போல் சந்தை இயங்கிய நிலையில், 4,000 டன் காய்கறிகள் மட்டுமே வந்தன. வரத்து குறைவால் அனைத்து காய்கறிகளும், கிலோவிற்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் அதிகரித்து விற்பனையாயின. இதையடுத்து, கிலோ 20 - 25 ரூபாய் விற்பனையான கேரட், நேற்று 40 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல, 20 - 25 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, 40 ரூபாய்க்கு; 30 ரூபாய்க்கு விற்பனையான வெண்டைக்காய் 40 - 50 ரூபாய்க்கும்; 25 - 30 ரூபாய்க்கு விற்பனையான முருங்கைக்காய் 40 - 50 ரூபாய்க்கும் விற்பனையாகின. வெயில் தாக்கம் நீடித்தால், விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.