உயர் அழுத்த மின் கம்பியில் பழுது தாம்பரம் தட ரயில் சேவை பாதிப்பு
சென்னை, நுங்கம்பாக்கம் அருகில், உயர் அழுத்த மின் இணைப்பு கம்பியில், நேற்று திடீரென பழுது ஏற்பட்டதால், கடற்கரை - தாம்பரம் தடத்தில், ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், தினமும் 150க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து, பகல் 12:35 மணிக்கு புறப்பட்ட மின்சார ரயில், தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில், நுங்கம்பாக்கம் அருகில் சென்றபோது, அங்குள்ள உயர் அழுத்த மின் கம்பியில் திடீரென பழுது ஏற்பட்டு, ரயிலுக்கான மின் சப்ளை தடைபட்டது. ரயில் ஓட்டுநர் உடனே, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த ரயில்கள், சேத்துப்பட்டு, எழும்பூர், பார்க் ரயில் நிலையங்களில், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், பயணியர் மின்சார ரயில்களுக்காக, ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள், சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். மின் வடத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து, பிற்பகல் 2:00 மணிக்கு பிறகே, இந்த தடத்தில் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.