மெட்ரோ மேம்பால துாணில் கம்பிகள் சாய்ந்ததால் பதற்றம்
பூந்தமல்லி, பூந்தமல்லி- -- கலங்கரை விளக்கம் இடையே 26 கி.மீ.,துாரத்திற்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த வழித்தடத்தில், பூந்தமல்லி, முல்லை தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல் ஆகிய இடங்களில் மேம்பால மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, குமணன்சாவடியில் 30 அடி உயரத்தில் மேம்பால துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த துாண்களில் 15 அடி உயரம் கட்டுமானம் முடிந்த நிலையில், அதன்மேல் 15 அடி உயரம் கட்டுமானம் முடியாமல் கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று திடீரென ஒரு துாணில் கட்டுமான கம்பிகள் பாரம் தாங்காமல் ஒரு பக்கமாக வளைந்து சாய்ந்தது. இதனால் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர், இரண்டு கிரேன்களை வரவழைத்து, சாய்ந்த கம்பிகளை சரிசெய்தனர்.