சென்னை :சென்னை ஆர்.ஏ.புரம் குடியிருப்பு பகுதியில் கொழுந்துவிட்டெரிந்த ஸோபா, மெத்தை கழிவுகளால் மாநகராட்சியின் அலட்சியம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொடுங்கையூர் மறுசுழற்சி மையத்தில் ஏற்க மறுப்பதால், சென்னை மாநகரம் முழுதும், ஆங்காங்கே இது போன்ற கழிவுகள் தேங்கி கிடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.சென்னை ஆர்.ஏ.புரம், சி.பி.ராமசாமி சாலை, 3வது குறுக்கு தெருவில், மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. அங்கு, அடையாறு மண்டலம் 173வது வார்டிற்கான நுண் உரத் தயாரிப்பு மையம் மற்றும் மறு சுழற்சியகம் உள்ளது. அங்கு, ஸோபா, கட்டில், மெத்தை, நாற்காலிகள், மரக்கழிவு, ஆயில் பேரல்கள் என, ஏராளமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில், நேற்று காலை, 8:00 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி, தேனாம்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் 45 நிமிடம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த தீ விபத்தில், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொருட்கள் எரிந்ததுடன், மூன்றுக்கும் மேற்பட்ட மரங்களும் பாதிக்கப்பட்டன. மேலும், அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், சுவாச பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். குடியிருப்பு மற்றும் அலுவலக பகுதிக்கு மத்தியில் குவிக்கப்பட்டிருந்த கழிவு பொருட்களால், தீ விபத்து ஏற்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேநேரம், தீ விபத்திற்கு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் தான் காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக, ஸோபா, கட்டில், மெத்தை போன்றவற்றை அகற்றி அழிப்பதற்கு, கொடுங்கையூரில் பிரத்யேக எரியூட்டும் ஆலை உள்ளது. அங்கு, சில நாட்களாக இக்கழிவை ஏற்றுக்கொள்ளததால் தான், அந்தந்த மண்டலங்களிலேயே, இக்கழிவுகள் தேக்கமடைந்தன என, 'உர்பேசர் ஸ்மித்' நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர்.உர்பேசர் ஸ்மித் நிறுவன நிர்வாகிகள் கூறியதாவது:ஸோபா, கட்டில், மெத்தை, நாற்காலிகள் போன்ற கழிவை கையாள, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மட்டுமே வசதி உள்ளது. சென்னை மாநகராட்சி முழுதும் அகற்றப்படும், இதுபோன்ற கழிவை அங்கு தான் கொண்டு செல்ல வேண்டும். கடந்த 10 நாட்களாக, அவர்கள் அக்கழிவை ஏற்க மறுத்துவிட்டனர். கழிவு கொண்டு செல்லப்பட்ட லாரியையும் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.இதனால் தான், இக்கழிவு பொருட்கள் தேங்கிக்கிடந்தன. இதுபோல், அனைத்து மண்டலங்களிலும் கழிவு தேக்கமடைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.கட்டட கழிவு அகற்ற மாநகராட்சி உரிய வழிகாட்டுதல் அளித்ததுபோல், வீட்டு உபயோக பொருட்களை அகற்ற சரியான வழிகாட்டுதல்களை மாநகராட்சி வழங்கினால், இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணலாம்.
விசாரணை நடத்தப்படும்
சென்னை மாநகராட்சியில், அனைத்து வித குப்பையை கையாளவும் வசதி உள்ளது. இதில், கொடுங்கையூர், பெருங்குடியில் தலா, 80 டன் அளவிற்கு மரக்கிளை கழிவை கையாளும் வகையில் வசதி உள்ளது. இங்கு, மரக்கூழ் தயாரிக்கப்பட்டு, சிமென்ட் ஆலை போன்றவற்றிற்கு வழங்கப்படுகிறது.
அதேபோல், ஸோபா, கட்டில், மெத்தை, நாற்காலி போன்ற கழிவை கையாள கொடுங்கையூர் குப்பை கிடங்கில், 50 டன் அளவிலான எரிஉலை உள்ளது. இப்பொருட்கள் எரியூட்டப்பட்டு, அச்சாம்பலில் இருந்து பேவர் பிளாக் கற்கள் தயாரிக்கப்படுகின்றன.
பராமரிப்பு பணி காரணமாக இரண்டு நாட்கள் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. அதேநேரம், கொண்டு வரப்பட்ட எப்பொருளையும் திருப்பி அனுப்பவில்லை. இங்கு, நேற்று கூட 40 டன் கழிவு எரியூட்டப்பட்டது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் கொண்டு வராமல், மாநகராட்சியை குறை கூறுவதை ஏற்க முடியாது. முறையான விசாரணை நடத்தப்படும்.
- அதிகாரி, திடக்கழிவு மேலாண்மை துறை,
சென்னை மாநகராட்சி
நீதிபதி, அமைச்சர்,வீட்டு கழிவுகள்
ஆர்.ஏ.புரத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த ஸோபா, கட்டில், மெத்தை போன்ற பொருட்கள், நீதிபதிகள், அமைச்சர்களின் குடியிருப்புகளில் இருந்து அகற்றப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் தான், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான திறந்தவெளி இடத்தில் அக்கழிவு சேகரிக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற கழிவு மண்டல அளவில் சேகரிக்கக்கூடாது; பெருங்குடி குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கும்படி, அடையாறு மண்டல அலுவலர் ஆர்டின், உர்பேசர் ஸ்மித் நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார்.