உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நகர விற்பனை குழு உறுப்பினர்கள் தேர்தலிலும் ஆளுங்கட்சி தலையீடு

நகர விற்பனை குழு உறுப்பினர்கள் தேர்தலிலும் ஆளுங்கட்சி தலையீடு

சென்னை, சென்னையில் சாலையோர வியாபாரத்தை ஒழுங்குப்படுத்த அமைக்கப்பட உள்ள நகர விற்பனை குழு உறுப்பினர் தேர்தலிலும், ஆளுங்கட்சியினரின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை மாநகராட்சியில், கமிஷனர் தலைவராக கொண்டு நகர விற்பனை குழு செயல்பட்டது. இதில், தேர்தல் வாயிலாக தேர்வான சாலையோர வியாபாரிகள் ஆறு பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.இக்குழு, மாநகர் முழுதும் செயல்படுவதில் சிக்கல் இருந்தது. எனவே, சாலையோர வியாபாரத்தை ஒழுங்கு படுத்த, மண்டலம் தோறும், வட்டார துணை கமிஷனரை தலைவராக கொண்ட நகர விற்பனை குழு அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு குழுவிற்கு ஆறு சாலையோர வியாபாரிகள் என, 90 உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில், அரசியல் செல்வாக்கு, கவுன்சிலர் தலையீடு போன்றவற்றால், மாதவரம், ஆலந்துார், பெருங்குடி ஆகிய மண்டலங்களில், 42 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.மீதமுள்ள மண்டலங்களில், 48 உறுப்பினர்களை தேர்வு செய்ய, பள்ளி, அலுவலகம் என, 12 இடங்களில் நேற்று தேர்தல் நடந்தது. ஓட்டளிக்க வாக்காளர்கள் ஆர்வம் காட்டினர். பதிவு செய்துள்ள 35,588 சாலையோர வியாபாரிகளில், 18,000க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஓட்டளித்து உள்ளனர்.ஓட்டு எண்ணிக்கை இன்று நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்கள் விபரம் வெளியிடப்பட உள்ளது.

மிரட்டல்

ஓட்டுப்பதிவின்போது, ஆளுங்கட்சியினர் மற்றும் உள்ளூர் கவுன்சிலர்கள் கூறும் நபர்களுக்குதான் ஓட்டுப்போட வேண்டும் என, சாலையோர வியாரிகளை, சிலர் மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து, சாலையோர வியாபாரிகள் கூறியதாவது:சாலையோர வியாபாரம் செய்யும்முன், அந்தந்த கவுன்சிலர்கள், ஆளுங்கட்சி நிர்வாகிகளிடமும் முன் அனுமதி பெற வேண்டும். மாதாந்திர வாடகை அடிப்படையில் கமிஷன் கொடுக்க வேண்டும். அவர்கள் தயவின்றி கடையை நடத்த முடியாது.தற்போது, நகர விற்பனை குழு உறுப்பினர் பதவி, சாலையோர வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக பார்க்கப்படுகிறது. எனவே, ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் அவர்கள் துணையுடன் போட்டியிடுபவர்களுக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என, நெருக்கடி தரப்பட்டது; மிரட்டலும் விடுக்கப்பட்டது.வெற்றி பெறுபவர்கள், போட்டியின்றி தேர்வானவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களாகவே இருப்பர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ