உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருந்த தி.மு.க., உறுப்பினரை தாக்கிய மூவர் கைது

முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருந்த தி.மு.க., உறுப்பினரை தாக்கிய மூவர் கைது

ஆதம்பாக்கம்,முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருப்பதாக கூறி, பீர் பாட்டிலால் தி.மு.க., வட்ட துணை அமைப்பாளரை சரமாரியாக தாக்கிய பெண்ணின் கணவன், சகோதரன் உள்ளிட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர்.ஆதம்பாக்கம், புவனேஸ்வரி நகர், 5வது தெருவை சேர்ந்தவர் தினேஷ், 25. தி.மு.க., வட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக உள்ளார்.நேற்று முன்தினம், பாலாஜி நகர் பிரதான சாலையில், 'ஓரணியில் தமிழகம்' என்ற திட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மூவரில் ஒருவர், 'என் மனைவி ரம்யாவுடன் ஏன் தற்போதும் தொடர்பில் இருக்கிறாய்' எனக்கூறி, பீர் பாட்டிலால் தாக்கினார். உடன் வந்த இருவரும் சேர்ந்து, சரமாரியாக தாக்கி தப்பிச்சென்றனர்.பலத்த காயமடைந்த தினேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.இது குறித்து, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், தினேஷ், ரம்யா என்ற பெண்ணை காதலித்துள்ளார். ஆனால், அவருக்கு கேளம்பாக்கம் அடுத்த தையூரை சேர்ந்த பிரவீன்குமார், 22, என்பவருடன் திருமணம் நடந்தது.அவர்களுக்கு குழந்தை உள்ள நிலையில், ரம்யாவுடன் தினேஷ் தொடர்பில் இருந்துள்ளார்.இது தெரியவந்த பிரவீன், ரம்யாவின் சகோதரரான, ஆதம்பாக்கம், பாலாஜி நகரை சேர்ந்த ராகுல், 23, அவரின் நண்பரான பெருங்குடியை சேர்ந்த மணிகண்டன், 27, ஆகியோருடன், தினேஷை தாக்கிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.இந்நிலையில், நேற்று மாலை காவல் நிலையத்தில் மூவரும், வழக்கறிஞர்கள் உதவியுடன் சரணடைந்தனர்.அவர்களை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ