நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.11 கோடி மோசடி: மூவர் கைது
சென்னை:சென்னை வானகரத்தில், 'போயா கான் ஜுவல்லர்ஸ்' என்ற நகைக்கடை நடத்தி வருபவர் ஸ்ரீதேவி, 50. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்: அண்ணாநகரை சேர்ந்த சுனிதா பிரகாஷ், அவரது கணவர் பிரகாஷ் மற்றும் அனிதா ஸ்ரீதர், சஞ்சய் சோலங்கி ஆகியோர் எனக்கு அறிமுகமாகினர். கடந்த, 2022 பிப்., முதல் 2024 டிசம்பர், 6 வரை கடனாக, 5.13 கோடி மதிப்புள்ள, 9.5 கிலோ தங்கம், 1.30 கோடி மதிப்புள்ள வைர நகைகளை பெற்றனர். அத்துடன், முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு லாபம் தருவதாக பெற்ற, 4.45 கோடி என, மொத்தம், 10.89 கோடி ரூபாய் வரை பெற்று ஏமாற்றி விட்டனர். இதுகுறித்து கேட்ட போது, பிரகாஷும், சிவகுருநாதவும், என்னை மிரட்டியதோடு, அவதுாறான வார்த்தைகளால் திட்டி துன்புறுத்தினர். எனவே, மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இழந்த தங்க வைர நகைகள் மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். ஸ்ரீதேவியை ஏமாற்றும் நோக்கத்தில் நகைகளை பெற்று, அதற்குண்டான பணத்தை திரும்ப கொடுக்காமல், வழக்கறிஞர் சிவகுருநாதன் என்பவர் வாயிலாக மிட்டியது தெரியவந்தது. சிவகுருநாதன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மோசடியில் ஈடுபட்ட அண்ணாநகரை சேர்ந்த சுனிதா 43, பிரகாஷ், 43, திருவான்மியூரைச் சேர்ந்த சிவகுருநாதன், 47 ஆகிய மூவரையும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.