உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் வினியோகத்தில் முறைகேடு தடுக்க லாரிகளில்...ஜி.பி.எஸ்., கருவி அத்துமீறினால் ரூ.10,000 அபராதம்; ஒப்பந்தமும் ரத்து

குடிநீர் வினியோகத்தில் முறைகேடு தடுக்க லாரிகளில்...ஜி.பி.எஸ்., கருவி அத்துமீறினால் ரூ.10,000 அபராதம்; ஒப்பந்தமும் ரத்து

குடிநீர் விநியோகத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, லாரிகளில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி, கட்டுப்பாட்டு அறை வாயிலாக, வாரியம் கண்காணித்து வருகிறது. அத்துமீறும் லாரிகளுக்கு முதல்முறை 10,000 ரூபாய் அபராதம் விதிப்பதோடு, மூன்று முறை விதிமீறலில் ஈடுபட்டால், ஒப்பந்தமும் ரத்து செய்யப்படும் எனவும், வாரியம் எச்சரித்துள்ளது.சென்னையில் வசிக்கும் ஒரு கோடி பேருக்கு, சென்னை குடிநீர் வாரியம் சார்பில், தினமும் 107 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இதில், குடிநீர் இணைப்பு இல்லாத, சாலையோர தொட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யும் குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்கு, 452 லாரிகள் வாயிலாக, 20 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த லாரிகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளன.இந்த லாரி ஓட்டுநர்கள், தெரு விநியோகம் மற்றும் தொட்டிகளில் நிரப்பும் குடிநீரை, வணிக நிறுவனங்களுக்கு வழங்கி முறைகேடு செய்தனர். பணம் செலுத்தி வாங்கும் குடிநீரை, தொட்டிகளில் முழுவதையும் நிரப்பாமல், மீதம் எடுத்து சென்று, வெளியேயும் விற்பனை செய்து வந்தனர்.இதனால், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மீது, வாரியத்திற்கு புகார்கள் வருவது அதிகரித்தன. மேலும், நீரேற்று நிலையங்களிலும் லாரிகளில் முறைகேடாக குடிநீர் நிரப்பி, அதை வெளியில் விற்பனை செய்ததால், வாரியத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.இதுபோன்ற நிதி இழப்பு, முறைகேடை தடுக்க, லாரிகளில் ஜி.பி.எஸ்., பொருத்தி, எங்கெல்லாம் அவை செல்கின்றன என கண்காணிக்கும் நடவடிக்கையில், குடிநீர் வாரியம் இறங்கியுள்ளது.மேலும், லாரி தொட்டியில், 'சென்சார்' பொருத்தி, நீரேற்று நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லும் குடிநீர், பகுதிமக்களுக்கு முறையாக வினியோகிக்கப்படுகிறதா என, கண்காணிக்கப்படுகிறது.இதுகுறித்து,குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு லாரிக்கும், பதிவு எண் அடிப்படையில், 'ஸ்மார்ட்' அட்டை வழங்கப்பட்டு உள்ளது. நீரேற்று நிலையத்தில், எந்த பகுதிக்கு எந்த லாரி செல்ல வேண்டும், எத்தனை லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட விபரங்கள் இருக்கும்.குடிநீர் பிடிக்கும் இடத்தில், குழாயில் பொருத்தப்பட்டுள்ள கருவியில், ஸ்மார்ட் அட்டையை வைத்ததும், லாரியின் கொள்ளளவுக்கு ஏற்ப குடிநீர் நிரம்பும். தண்ணீரை நிரப்பிய பின், ஜி.பி.எஸ்., எனும் இருப்பிடம் கண்டறியும் கருவி வாயிலாக, லாரிகள் எந்த வழியாக செல்ல வேண்டும் என 'ரூட் மேப்' வழங்கப்படும்.பணம் செலுத்தி குடிநீர் வாங்கினால், அதற்கான தொட்டியில் நிரப்ப வேண்டும். மீதமாகும் குடிநீரை நீரேற்று நிலையம் எடுத்து வர வேண்டும். வேறு இடங்களில் ஊற்றக்கூடாது. வீட்டு தொட்டியில் இருந்து, 50 மீட்டர் சுற்றளவை கடந்து சென்றால், தானியங்கி வாயிலாக ஸ்மார்ட் அட்டை துண்டிக்கப்படும்.

தெரு தொட்டியாக இருந்தால், ஒவ்வொரு தொட்டிக்கும் ஒரு நம்பர் உள்ளது. அதில் தான் ஊற்ற வேண்டும். தவறி வேறு விதமாக பயன்படுத்தினால், அட்டையின் இயக்கம் தடைபடும். தெரு விநியோகத்திலும், நிர்ணயிக்கும் தெருக்களில் மட்டுமே குடிநீர் வழங்கப்படும். முறைகேடாக பயன்படுத்தினால், அட்டை காலாவதி செய்யப்படும்.இதன் வாயிலாக, குடிநீர் முறைகேடு தடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் தேவையான குடிநீர் கிடைப்பதுடன், புகார்களும் கணிசமாக குறைந்துள்ளன.ஓட்டுநர்கள் முறைகேடு செய்தால், ஸ்மார்ட் அட்டையின் இயக்கம் முதல்முறை தடைபட்டால், 10,000 ரூபாய் அபராத தொகை செலுத்த வேண்டும். இதுபோல், மூன்று முறை முறைகேடில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட லாரியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்ற மக்கள்

பெரும்பாக்கம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகளில், 10 நாட்களாக சரியாக குடிநீர் வரவில்லை. குடிநீர் குழாயில் அழுத்தம் குறைவே இதற்கு காரணம் என, கூறப்படுகிறது. குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை.இதனால் ஆத்திரமடைந்த மக்கள் புகார் அளிப்பதற்காக நேற்று, பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு திரண்டு சென்றனர். தகவல் அறிந்த போலீசார், அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.குடிநீர் வாரிய உயர் அதிகாரிகளிடம் பேசி, குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி