பாண்டிபஜாரில் போலீஸ்காரரை வம்பிழுத்து தாக்கிய இருவருக்கு வலை
பாண்டிபஜார், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருதம் போலீஸ் வளாகத்தில், கமாண்டோ படையில் போலீஸ்காரராக பணிபுரிபவர் சக்திவேல், 27.இவர், தி.நகர், டி.என்., சாலையில் உள்ள பெட்ரோல் 'பங்க்'கில், அரசு வாகனத்திற்கு நேற்று முன்தினம் இரவு டீசல் போட்டார். அங்கு வந்த 'மாருதி ஸ்விப்ட்' கார், சக்திவேல் மீது மோதுவது போல் சென்றது. அதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து, காரில் வந்த நபர் இன்னொருவரை போன் செய்து வரவழைத்துள்ளார்.இருவரும் சேர்ந்து போலீஸ்காரர் சக்திவேலை தாக்கினர்.இதில் காயமடைந்த சக்திவேல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம்
வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பிரசாந்த், 22. நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில், நண்பர்களுடன் மது அருந்தி, வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போதையில் இருந்தவர்களை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.அப்போது, பிரசாந்த் மட்டும் போலீசாரிடம் தகராறு செய்து, ஆட்டோவை எடுக்க முற்பட்டார். போதையில் இருந்ததால், அவரை ஆட்டோவை எடுக்க ஏட்டு லோகேஸ்வரன் அனுமதிக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த், அருகே நின்ற எஸ்.ஐ., விக்னேஸ்வரனின், 29, கழுத்தில் தாக்கினார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அவர் வீடு திரும்பினார். அவரது புகாரின்படி, பிரசாந்த்தை செம்பியம் போலீசார் நேற்று கைது செய்தனர்.