கதவை மூடிய பஸ் ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது
மாதவரம், கதவை மூடி பேருந்தை இயக்கிய ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.வள்ளலார் நகரில் நேற்று முன்தினம் புறப்பட்ட தடம் எண் '57டி' மாநகர பேருந்து, மாதவரம் வழியாக செங்குன்றத்திற்கு சென்று கொண்டிருந்தது. இதன் ஓட்டுநராக, மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 39, என்பவர் பணியில் இருந்தார்.மூலக்கடை நிறுத்தத்தில் பயணியரை ஏற்றி, புறப்பட தயாரானபோது, பேருந்தின் கதவுகளை ஓட்டுநர் மூடினார். அப்போது, பேருந்தில் பயணம் செய்த இருவர், 'கதவை மூடக்கூடாது' எனக்கூறி, ஓட்டுநரிடம் தகராறு செய்தனர்.அவரை அநாகரிகமாக பேசியதோடு, பேருந்தை இயக்கவிடாமல் இடையூறு செய்தனர். பின், அடுத்த நிறுத்ததில் ஓட்டுநர், பேருந்தை நிறுத்தியபோது, அவரை திடீரென தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர்.இது குறித்து ராஜேஷ், மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரித்த போலீசார், அரசு பணியில் இடையூறு ஏற்படுத்தி, ஓட்டுநரை தாக்கிய மாதவரத்தைச் சேர்ந்த காட்வின் ஜெபகோல், 19, மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும், கைது செய்தனர்.