உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாய்மை பணியாளர் கொலை சக ஊழியர் உட்பட இருவர் கைது

துாய்மை பணியாளர் கொலை சக ஊழியர் உட்பட இருவர் கைது

சென்னை, தனியார் ஊடகத்தில் துாய்மை பணியாளர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மயிலாப்பூர், அம்பேத்கர் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் வேலன், 57. இவரும், ராயப்பேட்டையைச் சேர்ந்த விஜய், 24, என்பவரும், எம்.ஆர்.சி., நகரில் உள்ள தனியார் ஊடகத்தில் ஒப்பந்த அடிப்படையில், துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தனர். கடந்த 9ம் தேதி மதியம் 2:30 மணியளவில், மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் தெரு வழியாக, வேலன் நடந்து சென்றார். அப்போது, மர்ம நபர்கள் இருவர் அவரை கல்லால் கொடூரமாக தாக்கி, தப்பிச் சென்றுள்ளார். இதில், பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினவரை, மயிலாப்பூர் போலீசார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதேநேரம், மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், வேலனை தாக்கியது, ராயப்பேட்டை கபாலி தெருவைச் சேர்ந்த விஜய், 24, மற்றும் அவரது உறவினர் விக்னேஷ், 23, என்பது தெரியவந்தது. விஜய் ஒழுங்கீனமாக பணிபுரிந்து வந்ததால், சில தினங்களுக்கு முன் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கு வேலன் தான் காரணம் என நினைத்து, தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேலன், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், விஜய், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி