உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆழ்கடலில் கவிழ்ந்த விசைப்படகு காசிமேடு மீனவர்கள் இருவர் மாயம்

ஆழ்கடலில் கவிழ்ந்த விசைப்படகு காசிமேடு மீனவர்கள் இருவர் மாயம்

காசிமேடு, ஆழ்கடலில் சேதமடைந்த விசைப்படகில் இருந்த, காசிமேடு மீனவர்கள் இருவர் மாயமாகினர்.கடந்த 1ம் தேதி காலை, திருவான்மியூரைச் சேர்ந்த ஸ்ரீதர், 47, என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், விசைப்படகு ஓட்டுனர் சேகர், 60, தலைமையில், ராயபுரத்தைச் சேர்ந்த ராஜா, 61, காசிமேடைச் சேர்ந்த மாசிலாமணி, 72, சுதாகர், 50, ஜெகன், 35, விஜயமூர்த்தி, 60, உள்ளிட்ட ஆறு பேர், ஆழ்கடலுக்கு மீன்படிக்க சென்றனர்.திருவான்மியூர் கடல் பகுதியில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, காற்றின் வேகம் மற்றும் விசைப்படகின் கயிறு பாறையில் சிக்கியதில், விசைப்படகு கவிழ்ந்துள்ளது.உடனடியாக, சேகர், ஜெகன், விஜயமூர்த்தி, சுதாகர் ஆகிய நால்வரும், மிதவையை பயன்படுத்தி, கரைக்கு நீந்தி செல்வதாக கூறியுள்ளனர்.ராஜாவும், மாசிலாமணியும் தங்களால் நீந்த முடியாது எனக்கூறி, மூழ்கிய விசைப்படகிலேயே அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையில், மிதவை மூலம் நீந்திக்கொண்டிருந்த நான்கு மீனவர்களும், அலை வாட்டம் காரணமாக, ஸ்ரீஹரிகோட்டா அருகே கரை ஒதுங்கியுள்ளனர். அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த திருவொற்றியூர் மீனவர்கள், அவர்களை பத்திரமாக மீட்டு, காசிமேடு மீன்பிடித்துறைமுகத்திற்கு நேற்று அழைத்து வந்தனர்.இதற்கிடையில், ராஜா மற்றும் மாசிலாமணி கரை திரும்பவில்லை. இதுகுறித்து, விசைப்படகு உரிமையாளர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் போலீசாரிடமும், மீன்வளத்துறை உதவி இயக்குனரிடமும் புகார் தெரிவித்துள்ளார்.மாயமான மீனவர்களை தேடும் பணியில், கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை