வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவர் செய்தது அக்கிரமச் செயல், கொலை செய்து விட்டு வாசுதேவனைக் கும்பிட்டால் அவர் வந்து உதவி செய்வாரா? அப்படிச் செய்தால் அவர் கடவுளே இல்லை!
திருவேற்காடு, சென்னை வெளிவட்ட சாலையில், அதிவேகமாகவும் தாறுமாறாகவும் ஓடிய கார் மோதி, இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மூன்று பேர் படுகாயமடைந்தனர். ஏழு வாகனங்கள் சேதமடைந்தன. போலீசாரின் விசாரணையில், மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில், தன்னிலை இழந்த ஐ.டி., ஊழியரால், இந்த கோர சம்பவம் அரங்கேறியது தெரிய வந்தது. தாம்பரம் - மதுரவாயல் வெளிவட்ட சாலையில், போரூர் சுங்கச்சாவடியை கடந்து, நேற்று பகல் 11:30 மணியளவில், 'ஜீப்' நிறுவனத்தின் எஸ்யூவி கார் ஒன்று அதிவேகமாக சென்றது. தறிகெட்டு ஓடிய கார், முன்னால் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களை இடித்து விட்டு நிற்காமல் சென்றது. மதுரவாயல் வெளிவட்ட சாலையில் இருந்து, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இடது புறம் திரும்பிய கார், ஆட்டோ மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மீது மோதி, நிற்காமல் சென்றது. இந்த சம்பவத்தால், போரூர் முதல் வேலப்பன்சாவடி வரையிலான 3.5 கி.மீ.,க்கு, ஆறு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ சேதமடைந்தன. இந்த சம்பவத்தில், 'பஜாஜ் பல்சர்' பைக்கில் சென்ற அயனாவரத்தைச் சேர்ந்த அர்ஜுன், 33, என்பவர், தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த அவரது தந்தை ஜெகதீசன், 63, உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தார். இதில், நுாம்பல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத், 63, என்பவர் சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை உயிரிழந்தார். ஆத்திரமடைந்த பிற வாகன ஓட்டிகள், பொதுமக்கள், அந்த காரை விரட்டி சென்றனர். தகவலறிந்த போக்குவரத்து போலீசார், வேலப்பன்சாவடி சிக்னல் அருகே, சாலையின் குறுக்கே தடுப்பு அமைத்து, அந்த காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்து இறங்கிய நபர், பொதுமக்களிடமும் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், பொதுமக்கள் காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கி, அந்த நபரை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, சாலையோரத்தில் பித்து பிடித்தவர் போல் அமர்ந்திருந்த அவர், 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ' என, சமஸ்கிருத மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தார். பின், சாலையில் மயங்கி சரிந்தார். பின், மயக்கம் தெளிந்த அவரை, திருவேற்காடு போலீசார் காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர். அவர் போலீசாருடன் வர மறுத்து, 'என் குழந்தையை குடுங்க சார்; என் குழந்தையை குடுங்க சார்' எனக்கூறியபடி இருந்தார். பின், திடீரென 'யாழினி, யாழினி...' என, தன் மகள் பெயரை சொல்லி கத்திக்கொண்டே இருந்தார். அப்போது, பதற்றத்துடன் காரில் அழுதுகொண்டிருந்த அவரது மகளை மீட்ட போலீசார், அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அதன்பின், ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவரை சமாதானம் செய்து, திருவேற்காடு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர், திருவேற்காடு, வி.ஜி.என்., மகாலட்சுமி நகரைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் சாய் ஸ்ரீனிவாசன், 35, என தெரிந்தது. அவர், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், தன் 3 வயது மகளை காரில் ஏற்றி கொண்டு வெளியே சென்றதும், வீடு திரும்பும்போது விபத்து ஏற்படுத்தியதும் தெரிந்தது. இந்நிலையில், 'மகளுடன் டிபன் வாங்க சென்றபோது விபத்து நடந்தது' என, அவரது மனைவி சம்யுக்தா போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த மதுரவாயல் மற்றும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சாய் ஸ்ரீநிவாசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இவர் செய்தது அக்கிரமச் செயல், கொலை செய்து விட்டு வாசுதேவனைக் கும்பிட்டால் அவர் வந்து உதவி செய்வாரா? அப்படிச் செய்தால் அவர் கடவுளே இல்லை!