மெட்ரோ சுரங்க பணியை வெற்றிகரமாக முடித்த வைகை
சென்னை: கிரீன்வேஸ் சாலை - மந்தவெளி இடையே, சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்த 'வைகை' இயந்திரம்,வெளியேறியது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ., வழித்தடத்தில் 26.7 கி.மீ., தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைகிறது. இந்த வழித்தடத்தில் கிரீன்வேஸ் சாலை மற்றும் மந்தவெளி நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் துவங்கியது. சுரங்கம் தோண்டும் பணிகளுக்காக, 'நொய்யல்' மற்றும் 'வைகை' என பெயரிடப்பட்ட இரண்டு ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில், 'வைகை' இயந்திரம், கிரீன்வேஸ் சாலையில் 775 மீட்டர் நீளம் சுரங்கம் தோண்டும் பணியைத் முடித்து, மந்தவெளி நிலையத்தை நேற்று வந்தடைந்தது. இந்த நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டன் எலியாசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.