உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை ஆக்கிரமிப்பு உணவகங்களால் குப்பை கிடங்காகும் வீராங்கல் ஓடை

சாலை ஆக்கிரமிப்பு உணவகங்களால் குப்பை கிடங்காகும் வீராங்கல் ஓடை

புழுதிவாக்கத்தில், வேளச்சேரி- - பரங்கிமலை உள்வட்ட சாலையை ஆக்கிரமித்து நடத்தப்படும் உணவகங்கள் உள்ளிட்ட நடைபாதை கடைகள் கொட்டும் கழிவு பொருட்களால், வீராங்கல் ஓடை குப்பை கி டங்காக மாறி வருகிறது. ஆதம்பாக்கம் ஏரி கலங்கலில் இருந்து உபரி நீர் செல்லும் பிரதான நீர்வழித்தடமாக, வீராங்கல் ஓடை விளங்குகிறது. இது, வாணுவம்பேட்டையில் இருந்து சதுப்பு நிலம் வரை, 3,200 மீட்டர் நீளம் கொண்டது. ஏரியின் உபரிநீர், இந்த ஓடை வழியாக சதுப்பு நில பகுதிக்கு சென்று, அங்கிருந்து ஒக்கியம் மடு வழியாக பகிங்ஹாம் கால்வாயில் சேர்ந்து கடலில் கலக்கிறது. ஆரம்ப காலகட்டத் தில், 60 அடிக்கும் மேல் அகலமிருந்த ஓடை, அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால் தற்போது சுருங்கியுள்ளது. நம் நாளிதழில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட செய்திகளின் விளைவாக, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓடையின் இருபுறமும் சுவர் எழுப்பி விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், புழுதிவாக்கத்தில், வேளச்சேரி- - பரங்கிமலை உள்வட்ட சாலையின் இருபுறமும், உணவகங்கள், குளிர்பானம், சூப் விற்பனை கடைகள், பழம் விற்பனையகங்கள் புற்றீசல் போல் முளைத்து வருகின்றன. இவற்றால், அச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உணவகம் மற்றும் பிற கடைகளில் இருந்து, தினசரி இரவில் கொட்டப்படும் கழிவு பொருட்களால், வீராங்கல் ஓடை குப்பை கிடங்காக மாறி வருகிறது. அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நெடுஞ்சாலை மற்றும் காவல் துறையினருக்கு புகார் அளித்தால், பெயரளவிற்கு மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும், அடுத்த நாளே மீண்டும் சாலை ஆக்கிரமிக்கப்படுகிறது என்றும், அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. - -நமது நிருபர்- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை