சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்கள் குப்பையை அகற்றுவதில் தொடரும் சிக்கல்
குரோம்பேட்டை, தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், குரோம்பேட்டை, நியூ காலனியில் 1,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதியில், 14வது குறுக்கு, ஐந்தாவது குறுக்கு, ஒன்றாவது குறுக்கு தெரு, அம்பாள் நகர் அண்ணா தெரு, மும்மூர்த்தி நகர் ஒன்றாவது தெரு ஆகிய தெருக்களில், சாலையை ஆக்கிரமித்து கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவது அதிகரித்து விட்டது.இதனால், இத்தெருக்களில் குப்பை எடுக்கும் வாகனம், கொசு மருந்து அடிக்கும் வாகனம், தண்ணீர் லாரிகள் சென்று வர முடியவில்லை. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியவில்லை.இது குறித்து, குரோம்பேட்டை சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்தில், அண்ணா இந்திரா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் புகார் தெரிவித்தும், போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சியில் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை.இதனால், கொசு தொல்லை மற்றும் குப்பை பிரச்னையால், இப்பகுதிவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.எனவே, இப்பிரச்னையில், மாநகராட்சி - காவல் துறை இணைந்து, சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.