உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 200 தொகுதி என்ற இலக்கை அடைய வேண்டும்: உதயநிதி

200 தொகுதி என்ற இலக்கை அடைய வேண்டும்: உதயநிதி

திரு.வி.க.நகர், ''முதல்வர் நமக்கு கொடுத்த, 200 தொகுதி இலக்கை எட்ட, இப்போதில் இருந்தே உழைக்க வேண்டும்,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 5.9 கோடி ரூபாய் செலவில் நிறைவுற்ற பணிகளை துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்; புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். முன்னதாக, புளியந்தோப்பில் தி.மு.க., மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார். இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ., தாயகம் கவி, மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்வில், உதயநிதி பேசியதாவது: தி.மு.க., ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக செயல்படும் என, முதல்வர் அறிவித்ததும், 'திராவிட மாடல் என்றால் என்ன' என, பலரும் கேள்வி எழுப்பினர். 'எல்லாருக்கும் எல்லாமுமான அரசு தான் திராவிட மாடல் அரசு' என, முதல்வர் கூறினார். அதற்கேற்ப ஆட்சி நடந்து வருகிறது. பொற்கிழியை விட பெருமையான விஷயம், நீங்கள் எல்லாரும் கழுத்தில் போட்டுள்ள கறுப்பு சிவப்பு துண்டு என்பதும் எனக்கு தெரியும். இன்னும் ஏழு மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. குறைந்தது, 200 தொகுதியில் தி.மு.க., கூட்டணி வெல்ல வேண்டும் என, நமக்கு முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை அடைய நாம் இப்போதில் இருந்தே உழைக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !