திறன் மேம்பாட்டு பயிற்சி என்னாச்சு? தாட்கோ மீது மாணவர்கள் புகார்
சென்னை:பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயனடையும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமான, 'தாட்கோ' நிறுவனம், திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகளை, மாணவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப வழங்கி வருகிறது.கோடை விடுமுறை முடிய ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு பயிற்சி வழங்க, 'தாட்கோ' அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக, கல்லுாரி மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, அரசு விடுதி மாணவர்கள் சிலர் கூறியதாவது:புதுடில்லி, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், ஒரு மணி சிறப்பு பயிற்சி வகுப்பை நடத்தி வருகின்றன. அதேபோல, தமிழகத்திலும் பெரும்பான்மையான பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மாணவர்களுக்கு கோடை சிறப்பு வகுப்புகள், பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.ஆனால், தாட்கோ சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பை நிறைவு செய்த, பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, எந்த வழிகாட்டு நிகழ்ச்சியும், பயிற்சியும் வழங்கப்படாமல் உள்ளது. பொதுவாக தாட்கோவில், மாணவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுவது வழக்கம். பலரும் எதிர்பார்த்த வழிகாட்டு நிகழ்ச்சியை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும், தாட்கோ நிறுவனமும் நடத்தாமல் இருப்பது வேதனையாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.