உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குஜராத்திலிருந்து சென்னை பூங்காவுக்கு வந்த... - சிங்கம் எங்கே? கூண்டிற்கு திரும்பாததால் வண்டலுாரில் பீதி

குஜராத்திலிருந்து சென்னை பூங்காவுக்கு வந்த... - சிங்கம் எங்கே? கூண்டிற்கு திரும்பாததால் வண்டலுாரில் பீதி

தாம்பரம் : தேசிய விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின்கீழ், குஜராத் மாநிலத்தில் இருந்து சமீபத்தில், சென்னை வண்டலுார் பூங்கா வந்தடைந்த சிங்கம், திடீரென மாயமாகியுள்ளது. காட்டுப்பகுதியில் விடப்பட்ட சிங்கம் கூண்டிற்கு திரும்பாததால், வண்டலுாரில் பீதி ஏற்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பு பெற்றது, வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு, 1,500 ஏக்கர் பரப்பளவில், பாலுாட்டிகள், ஊர்வன, பறவைகள், ஊன் உண்ணிகள் என, எட்டு வகைகளில் 2,400 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வார நாட்களில், 3,000 பேர்; விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், 9,000 பேர் வரை, பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இப்பூங்காவில் பார்வையாளர்களை குஷிப்படுத்தும் நோக்கில், 147 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காட்டுப் பகுதியில், சிங்கங்களை அருகே சென்று கண்டு ரசிக்கும், 'லயன் சபாரி' பயன்பாட்டில் உள்ளது. இதை சுற்றி, இரு வகையான இரும்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு வசதியுடைய வாகனங்களில் பார்வையாளர்களை அமரவைத்து, லயன் சபாரி இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்வர். அருகே வரும் சிங்கங்களை பார்வையாளர்கள் பார்த்து ரசித்து, திரும்பும் வழியில், மான் சபாரியையும் கண்டு ரசிக்கலாம். இதற்காக, பெரியவர்களுக்கு - 150, சிறியவர்களுக்கு - 30 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. லயன் சபாரியில், ஆறு சிங்கங்கள் உள்ளன. அதில், இரண்டு சிங்கங்கள், பார்வையாளர்கள் கண்டு ரசிக்க காட்டுப்பகுதியில் விடப்படும். மற்ற நான்கு, கூண்டில் அடைக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில், நேற்று முன்தினம், புதிதாக ஆண் சிங்கம் ஒன்று, லயன் சபாரி காட்டுப்பகுதியில் விடப்பட்டது. இந்த சிங்கம் தேசிய விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், குஜராத் மாநிலம், ஜூனாகட் நகரில் உள்ள சக்கார்பாக் விலங்கியல் பூங்காவில் இருந்து, வண்டலுார் பூங்காவிற்கு அனுப்பப்பட்டது. கூண்டில் அடைத்து பாதுகாக்கப்பட்டு வந்த இந்த சிங்கத்தை, பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில், நேற்று முன்தினம், 'லயன் சபாரி' பகுதியில் முதல்முறையாக விட்டனர். பொதுவாக, காட்டுப்பகுதியில் விடப்படும் சிங்கங்கள், மாலை நேரம் ஆனதும், கூண்டிற்கு தானாக திரும்பி வந்துவிடும். ஆனால், புதிதாக விடப்பட்ட ஆண் சிங்கம், மாலை ஆகியும் கூண்டிற்கு திரும்பவில்லை. கண்ணுக்கு எட்டும் துாரத்திலும் அதை காணவில்லை. காட்டுப் பகுதிக்குள் எங்கு சென்றது என்பது தெரியாததால், ஊழியர்கள் பதட்டம் அடைந்தனர். இரவில் வந்துவிடும் என எதிர்பார்த்தும் வரவில்லை; நேற்று காலை வரை சிங்கம் திரும்பவில்லை. இதையடுத்து, சிங்கம் மாயமானது குறித்த விபரம், பூங்கா நிர்வாகத்திற்கும், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, லயன் சபாரியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு வேலிகள் சரியாக உள்ளனவா என ஆய்வு நடந்தது. அதேநேரம், காட்டுப்பகுதிக்குள் சென்ற சிங்கம் தானாக திரும்பும் என்ற நம்பிக்கையில், நேற்று காலை வழக்கம் போல், லயன் சபாரிக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். விலங்கின ஆர்வலர்கள் கூறியதாவது: லயன் சபாரி துவங்கப்பட்டபோது சுற்றி அமைக்கப்பட்ட வேலியை, நாள்தோறும் ஆய்வு செய்து, சரியாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே, சிங்கங்கள் காட்டுப்பகுதிக்குள் திறந்து விடப்படும். வேலியை ஆய்வு செய்வதற்காகவே, தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நடைமுறை நாளடைவில் மறைந்து, தற்போது வேலியை ஆய்வு செய்வதே இல்லை. இதுபோன்று நடந்தால் மட்டுமே, வேலியை ஆய்வு செய்கின்றனர். அதனால், வேலியை நாள்தோறும் ஆய்வு செய்யும் முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். திரும்ப வந்துரும்! பூங்கா நிர்வாகத்தினர் கூறியதாவது: காட்டுப் பகுதிக்குள் புதிதாக ஒரு சிங்கத்தை விடும்போது, அது காட்டுப் பகுதிக்குள் செல்வது வழக்கம். லயன் சபாரியை சுற்றி, இரண்டு விதமான வேலி அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில் பலமாக உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன், இதேபோல் பெண் சிங்கம் ஒன்று காட்டுப்பகுதிக்குள் சென்று திரும்பாமல் இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து, அதுவாகவே திரும்பி விட்டது. அதே போல் இந்த சிங்கமும் திரும்பி வரும் என்ற நம்பிக்கையில், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M.Sam
அக் 05, 2025 16:45

விஜய் மீட்டிங்குக்கு போயிருக்குப வந்தால் உங்க லக்கு ஹி ஹி ஹி


raghavan
அக் 05, 2025 09:45

ட்ரோன் வைத்து தேட மாட்டார்களா? மைக்ரோ சிப் வைக்க வில்லையா? இவ்வளவு அலட்சியமா ?


Vasan
அக் 05, 2025 08:35

As the lion has arrived to Vandalur Zoo for the first time, it also might have gone on around the zoo. It will come back and settle in its place in a day or two.


Mani . V
அக் 05, 2025 06:32

"கண்ணாத்தாள்" திரைப்படத்தில் சொல்வது மாதிரி, எனக்கென்னமோ அப்பா மீதுதான் சந்தேகமாக இருக்கிறது.


முக்கிய வீடியோ