சென்னையில் வெயில் வறுத்தெடுப்பது ஏன்?
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுக்கிறது. பொதுவாக, அக்டோபரில் தென் மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை துவங்கும். மாலை, இரவு நேரங்களில் வெப்பச்சலன மழை பொழிந்தால், நிலப்பகுதி குளிர்ந்துவிடும். இதனால், வெயிலின் தாக்கம் அவ்வளவாக தெரியாது. சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, சென்னையில் நேற்று, 97 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 36 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பம் பதிவானது.ஆனால், பகல் நேரத்தில் வெளியில் செல்வோர், வெயிலின் தாக்கத்தால் சோர்ந்துவிடும் நிலை ஏற்பட்டது.இந்த குறிப்பிட்ட காலத்தில், வடக்கில் இருந்து வெப்பக்காற்று தெற்கு நோக்கி வீசும். இந்த காற்றுடன் நீராவி கலந்து, மேலே செல்லும்போது, அங்கு கருமேகங்கள் இருந்தால், வெப்பச்சலன மழை பெய்யும். சென்னை உள்ளிட்ட பகுதிகளின் மேல், அடர்த்தியான மழை மேகங்கள் இல்லாததால், வெப்பக் காற்றின் தாக்கத்தை மக்கள் தொடர்ந்து உணரும் நிலை ஏற்படுகிறது என, வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெயில் நேரடியாக படும் இடங்களுக்கு செல்வோர், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது.