மனைவிக்கு 11வது நாள் காரியம் சிறை கணவருக்கு 3 நாள் லீவு
சென்னை:சென்னை, புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மரியா சுமல்யா என்பவர் தாக்கல் செய்த மனு:போதைப்பொருள் வழக்கில், 2020ல் என் தந்தை சின்னதுரை, 60 கைது செய்யப்பட்டார். 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, தற்போது புழல் சிறையில் உள்ளார். என் தாய், கடந்த மாதம் 27ல் இறந்து விட்டார். அவரது 11வது நாள் காரியம், பிப்., 5 மற்றும் பிப்., 6ல் நடக்கிறது. இதில் பங்கேற்கவும், அதற்கான ஏற்பாடுகளை செய்யவும், என் தந்தைக்கு ஆறு நாட்கள் அவசர விடுப்பு வழங்க, சிறைத் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தேன்; அதன் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, அவசர விடுப்பு கோரிய என் விண்ணப்பத்தை பரிசீலித்து, சிறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் தந்தைக்கு மூன்று நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், 'விசாரணை கைதிகளின் ரத்த சொந்தங்களின் இறப்புக்கு, அவசர விடுப்பு வழங்கும் சிறைத்துறை அதிகாரிகள், 11வது நாள் காரியத்துக்கும் விடுப்பு வழங்குவது குறித்து சிறை நிர்வாகமே முடிவு எடுக்கலாம். 'அப்படி செய்தால், இதுபோன்ற வழக்குகளை தவிர்க்கலாம்' என, அறிவுறுத்தினர்.