வாடகை எடுத்த வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.3 கோடி சுருட்டிய பெண் வசமாக சிக்கினார்
சென்னை, நீலாங்கரையில் வாடகைக்கு எடுத்த வீடுகளை, அதன் உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே, 46 பேரிடம் குத்தகைக்கு ஒப்பந்தம் போட்டு, 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த பெண்ணை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.நீலாங்கரையைச் சேர்ந்தவர் தருமன், 35. இவர், குத்தகைக்கு வீடு கேட்டு, நீலாங்கரை, ரெங்காரெட்டி கார்டன் பகுதியில், 'ஜூன் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட்' எனும் பெயரில் இயங்கிய தனியார் நிறுவனத்தை அணுகி உள்ளார். அதை நிஹமத் நிஷா, 52, என்பவர் நடத்தி வந்தார்.அப்போது, தான் வசிக்கும் வீட்டின் கீழ் தளத்தில், வீடு காலியாக உள்ளது எனக்கூறிய நிஷா, 7 லட்சம்ரூபாய்க்கு குத்தகை ஒப்பந்தம் போட்டுள்ளார். சில மாதங்களுக்கு பின், வேறு வீடு மாற நினைத்த தருமன், குத்தகை பணத்தை கேட்டுள்ளார்.இதனால், ஈஞ்சம்பாக்கம் நஞ்சுண்டா ராவ் சாலையில் வாடகைக்கு வீடு பார்த்து, அதில், தருமனை தங்க வைத்துள்ளார். பின், குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து, வாடகை ஒப்பந்தம் போட்டு தரும்படி நிஹமத்நிஷாவிடம், தருமன் வலியுறுத்தி உள்ளார். குத்தகை பணத்தை தருவதாக கூறி இழுத்தடித்த நிஹமத் நிஷா, திடீரென தலைமறைவாகிவிட்டார்.இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில், தருமன் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அதில், நீலாங்கரையைச் சேர்ந்த நிஷா, நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில், காலியாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், வில்லாக்கள், வெளிநாடுகளில் வசிப்போரின் வீடுகள் என தேர்வு செய்து, அவர்களிடம் தற்போதைய வாடகையை விட, 50 சதவீதம் உயர்த்தி தருவதாக ஆசைகாட்டி, மூளைச் சலவை செய்து ஒப்பந்தம் போட்டுள்ளார்.அடுத்த சில மாதங்கள் வரை, நாள் தவறாமல் வீட்டு உரிமையாளர்களின் வங்கி கணக்கில், பேசியபடி வாடகை செலுத்தியுள்ளார். அந்த வீடுகளை, வேறு நபர்களுக்கு 7 லட்சம்ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை, குத்தகைக்கு விட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதுவரை, தருமன் உட்பட 46 பேரிடம் இருந்து, 3 கோடி ரூபாய் வரை பெற்று, நிஹமத் நிஷா மோசடி செய்துள்ளார். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட ஒருவரை நிஹமத் நிஷா மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது, அவர் லாவகமாக பேசி, திருவான்மியூர் அருகே வரவழைத்து போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தார்.நேற்று முன்தினம், நிஹமத் நிஷாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணைக்கு அழைக்கவில்லை
பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூறியதாவது:நிஹமத் நிஷா, அவரது அலுவலகத்திற்கு அருகே உள்ள ஒரு வீட்டை குத்தகைக்கு விடுவதாக என்னிடம் கூறினார். இதை நம்பி, 8 லட்சம் ரூபாய் கொடுத்தேன். திடீரென தலைமறைவாகிவிட்டார்.நீலாங்கரை காவல் நிலையத்திலும், மத்திய குற்றப்பிரிவிலும் புகார் அளித்தேன். புகார் அளித்தவர்களில், ஒரு சிலரிடம் மட்டுமே போலீசார் விசாரித்து உள்ளனர். தங்களிடம் இதுவரை விசாரிக்கவே இல்லை. இழந்த பணம் எப்படி கிடைக்கும் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.