கார் மோதி பெண் பலி; மூன்று வாகனங்கள் சேதம்
பள்ளிக்கரணை; கோவிலம்பாக்கத்தில் 73 வயதுக்காரர் ஓட்டிய கார் மோதி, மொபட்டில் சென்ற பெண் உயிரிழந்தார்; மூன்று வாகனங்கள் சேதமடைந்தன. கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தேவகி, 50. இவர், ஆதம்பாக்கத்தில் வீட்டு வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு சென்றவர், மதியம் தன் டி.வி.எஸ்., 50 மொபட்டில், மேடவாக்கம் பிரதான சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஈச்சங்காடு சிக்னல் அருகே வந்தபோது, பின்னால் வந்த கார், அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்தவர் மயங்கி கிடந்தார். கார் ஓட்டுநர் விபத்து நடந்ததை பார்த்து அதிர்ச்சியில், 'பிரேக்'கிற்கு பதிலாக ஆக்சலேட்டரை அழுத்தியதால், கார் வேகமாக சென்று, மூன்று வாகனங்கள் மீது அடுத்தது மோதி நின்றது. இதில் மூன்று வாகனங்களும் சேதமடைந்தன. சாலையில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்த தேவகியை, அங்கிருந்தோர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய பள்ளிக்கரணை, காமகோட்டி நகரைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற தபால் துறை ஊழியரான கார் ஓட்டுநர் சங்கரன், 73, என்பவரை கைது செய்தனர்.