பெண்ணின் இதயத்தில் கட்டி; நுண்துளை சிகிச்சையில் அகற்றம்
சென்னை: பெண்ணுடைய இதயத்தின் இடது கீழறையில் இருந்த அரிய வகை கட்டியை, நுண்துளை சிகிச்சை வாயிலாக, வடபழனி சிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அகற்றினர். இதுகுறித்து, மருத்துவமனையின் தலைவர் ரவி பச்சமுத்து கூறியதாவது: சென்னையைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கு, இதயத்தில் ரத்தத்தை உந்தி தள்ளும் பிரதான அறையின் உட்புறத்தில் அரிதான கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. அது, 1.6 செ.மீ., அளவிலான கட்டி என்பதும் உறுதி செய்யப்பட்டது. இது போன்ற பாதிப்புகளுக்கு, மார்பு எலும்பை பிளந்து, திறந்தநிலை இதய சிகிச்சை செய்யப்படுவது வழக்கம். ஆனால், மருத்துவமனையின் இதயம் மற்றும் மேம்பட்ட நெருத்தமனி சிகிச்சை பிரிவு இயக்குநர் வி.வி.பாஷி, இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.முகமது இப்ராஹிம் குழுவினர், திறந்தநிலை சிகிச்சையின்றி தொழில்நுட்ப முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்படி, 'எண்டோஸ்கோப்பி' என்ற நுண்துளை அறுவை சிகிச்சை முறையில், விலா எலும்புகளுக்கு இடையே சிறு துளையிட்டு, தசைகளின் ஊடாக சென்று, இதயத்தின் அறைகளை அடைத்து, அந்த கட்டி அகற்றப்பட்டது. இந்த சிகிச்சையின் வாயிலாக நோயாளிக்கு பக்கவாதம் போன்ற சிக்கல்கள் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் மிக அரிதான இச்சிகிச்சை, இந்தியாவில் செய்வது முதல்முறை. இவ்வாறு அவர் கூறினார்.