உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கைக்குழந்தையுடன் பிச்சை எடுக்கும் பெண்கள்...மாயம்: டி.என்.ஏ., பரிசோதனை அறிவிப்பால் ஓட்டம்

கைக்குழந்தையுடன் பிச்சை எடுக்கும் பெண்கள்...மாயம்: டி.என்.ஏ., பரிசோதனை அறிவிப்பால் ஓட்டம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பிரதான சாலை சிக்னல்கள் முதல் சந்தை பகுதிகள் வரை, கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், மாநகராட்சியின் டி.என்.ஏ., பரிசோதனை எச்சரிக்கையை தொடர்ந்து பெரும்பாலான சிக்னல்களில் குழந்தையுடன் பிச்சை எடுத்தோர் மாயமாகினர். மீண்டும் அக்கும்பல் வர வாய்ப்பு இருப்பதால், டி.என்.ஏ., பரிசோதனையை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையின் பிரதான சாலை சிக்னல்கள், கோவில்கள், ரயில் நிலையங்கள், சந்தை பகுதிகளில், முதியோர், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், தங்களது வாழ்வாதாரத்திற்காக மற்றவர்களிடம் தானம் பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களுடன், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்தோர், கைக்குழந்தைகளை மடியில் அல்லது முதுகில் கட்டிக்கொண்டு பிச்சை எடுப்பது; பேனா, காது குடையும் 'பட்ஸ்' மற்றும் விளையாட்டு பொருட்கள், ஓவிய புத்தகம் போன்ற பொருட்களை, 20 ரூபாய் முதல் 200 ரூபாய்க்கு வம்படியாக விற்பனை செய்வது உள்ளிட்டவற்றை பின்பற்றி வருகி ன்றனர். குறிப்பாக, அண்ணா சாலை, அண்ணா நகர், அடையாறு, திருவான்மியூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில், பிச்சை எடுக்கும் பெண்களிடம் உள்ள கைக்குழந்தைகள் பெரும்பாலும், மயக்க நிலையிலேயே இருக்கின்றன. அதனால், பல இடங்களில் கடத்தப்பட்ட குழந்தைகள், சென்னையில் பிச்சை எடுக்க வைக்கப்படுகின்றனரா என்ற அச்சமும் எழுந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலிலும் குழந்தைகள் அசைவின்றி இருப்பதால், மயக்க மருந்தோ அல்லது போதை வஸ்துக்களோ கொடுத்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதுகுறித்து, சமீபத்தில் நடந்த சென்னை மாநகராட்சியின் கவுன்சில் கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், ''குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பது அதிகரித்து வருகிறது. அக்குழந்தைகள் அவர்களது தானா என்ற சந்தேகம் உள்ளது. எனவே, பஞ்சாப் மாநிலத்தைப்போல், பிச்சை எடுக்கும் பெண்கள் மற்றும் அவர்களிடம் உள்ள குழந்தைகளை டி.என்.ஏ., பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்'' என கோரிக்கை வைத்தார். இதற்கு மாநகராட்சி மேயர் பிரியா, ''நல்ல திட்டம்; பரிசீலித்து விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். இது சம்பந்தமாக மாநகராட்சி எச்சரிக்கை விடுத்த நிலையில், சென்னையில் அண்ணா நகர், அண்ணா சாலை போன்ற பல்வேறு இடங்களில், கைக் குழந்தைகளுடன் பிச்சை எடுத்து வந்த பெண்கள், திடீரென மாயமாகியுள்ளனர். அதேநேரம், ஒருசில இடங்களில் பிச்சை எடுப்பது தொடர்ந்தும் வருகிறது. குழந்தைகளை வைத்து பிச்சையெடுப்பதை தடுப்பது குறித்து, சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் கூறியதாவது: பஞ்சாப் மாநிலத்தைபோல், தமிழகத்திலும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போருக்கு டி.என்.ஏ., பரிசோதனை செய்ய, மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளோம். தவிர, குழந்தைகளை வைத்து பெற்றோரே பிச்சை எடுத்தாலும், அக்குழந்தைகளை மாநகராட்சி காப்பகங்களில் பராமரிப்பதுடன், பள்ளிகளில் படிக்க வைப்பது, அவர்களது உயர்கல்வியை மாநகராட்சியே ஏற்பது, திருடப்பட்ட குழந்தைகள் என கண்டறியப்பட்டால் பெற்றோரிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, டி.என்.ஏ., பரிசோதனையை கட்டாயமாக்கும் வகையில் அரசு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினர். தமிழகத்தில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையங்கள் ஆறு இடங்களில் செயல்பட்டன. நாளடைவில் அம்மையங்கள் செயல்படாமல் முடங்கின. அதனால், தமிழகத்தைச் சேர்ந்தோர் மட்டுமின்றி, அண்டை மாநிலத்தவரும் பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது. எனவே, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையம், மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. சாலையில் உள்ள குழந்தைகள், பருவத்திற்கு ஏற்ற உணவுகள் கிடைக்காதது, ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகையால் சோர்வாகவே இருக்கும். அவ்வாறான குழந்தைகளுக்கு, மது, கஞ்சா போன்ற போதை பொருட்கள் கொடுக்கும்பட்சத்தில், அவை எவ்வளவு சத்தத்திலும், வெயிலிலும் அசைவின்றி இருக்கும். மேலும், மயக்க மருந்து, துாக்க மாத்திரைகளும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறான குழந்தைகளை மீட்டு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால், அவர்களுக்கான சிறந்த வாழ்வை உறுதி செய்ய முடியும். இதற்கான சிறப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். - எஸ்.பெருமாள் பிள்ளை, அரசு குழந்தைகள் நல டாக்டர், சென்னை.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
ஆக 31, 2025 10:03

அருமையான முயற்சி


hariharan
ஆக 31, 2025 08:11

இப்படி மயக்க நிலையில் உள்ள குழந்தை வைத்திருப்பவர் மீது புகாரளிக்க தனி எண் உருவாக்க வேண்டும் அதை தனியார் தொண்டு நிறுவனம் கூட செய்யலாம்


ராமகிருஷ்ணன்
ஆக 31, 2025 04:48

கருணாநிதி காலத்தில் வந்த எல்லா திட்டங்களும் டுபாக்கூர் திட்டங்கள் தான். கட்சியினர் சுருட்டுவதற்கு ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள். ஒரு திட்டமாவது பலன் அளித்ததாக தகவல்கள் இருக்கா 200 ரூபாய் ஊபிஸ் சொல்லுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை