சாலை ஆய்வாளர்கள் நியமனம் காத்திருக்கும் இளைஞர்கள்
சென்னை:மாநிலம் முழுதும் 600 சாலை ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதால், நெடுஞ்சாலை பணிகளை கண்காணிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.தமிழக நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில், 66,000 கி.மீ., சாலைகள் உள்ளன. சாலைகள் தற்காலிக சீரமைப்பு, விரிவாக்கம், காலமுறை புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, உதவி பொறியாளர் வாயிலாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்படுகின்றன.உதவி பொறியாளர் வாயிலாக பல சாலைகளை கண்காணிக்க முடியாது என்பதால், 25 கி.மீ.,க்கு ஒரு சாலை ஆய்வாளர் நியமிக்கப்பட வேண்டும். இந்த நடைமுறை, 1986ம் ஆண்டு இருந்த சாலைகளை கணக்கிட்டு நியமனம் நடந்தது.மலைப்பகுதிகளில், 15 கி.மீ., சாலைக்கு ஒரு சாலை ஆய்வாளர் பணியிடம் உருவாக்கப்பட்டு உள்ளது. நெடுஞ்சாலைத் துறையில், 2,200 சாலை ஆய்வாளர் பணி நியமனம் செய்வதற்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது. இப்போது, 1,800 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் காலி பணியிடங்களை, 75 சதவீத அளவிற்கு நேரடி நியமனம் செய்ய அரசு அனுமதியுள்ளது. ஆனால், நான்கு ஆண்டுகளாக நியமனம் நடக்கவில்லை. சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சாலை ஆய்வாளர்கள் இல்லாததால், பணிகளை கண்காணிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. எனவே, காலியாகவுள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சாலை ஆய்வாளர் பணி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன், அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி மையங்களில், 'டிராப்ட்மேன் சிவில்' படித்த இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.